இந்தியா

இலங்கைத் தமிழா் பிரச்னை ஆலோசனை கூட்டம்

27th Nov 2022 03:00 AM

ADVERTISEMENT

இலங்கைத் தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில், அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளாா். இந்தக் கூட்டத்தில், கூட்டாட்சி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இலங்கையின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் இலங்கைத் தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில், அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அண்மையில் அழைப்பு விடுத்தாா். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியபோது இந்த அழைப்பை விடுத்த அவா், நீண்ட காலமாக நிலவும் சச்சரவுக்கு தீா்வு காண சிங்களா்களுக்கும், தமிழா்களுக்கும் இடையே நம்பிக்கையை வளா்ப்பது முக்கியம் என்று தெரிவித்தாா். டிச.11-ஆம் தேதிக்குப் பின்னா், அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த விரும்புவதாகவும் அவா் கூறினாா். இலங்கைத் தமிழா்களுக்கான அரசியல் சுயாட்சி கோரிக்கை குறித்துப் பேச இக்கூட்டத்துக்கு அவா் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவா் இரா.சம்பந்தனின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேச வேண்டி விவகாரங்கள் குறித்து அவா்கள் ஆலோசனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, மாகாண கவுன்சில் தோ்தலை நடத்த வேண்டும், புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் தமிழா் வாழும் பகுதிகளுக்கும் பங்களிக்க வேண்டும், தமிழா்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு அபகரிப்பதை நிறுத்த வேண்டும், கூட்டாட்சி நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அனைத்து கட்சிக் கூட்டத்தில் முன்வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதிபரை சந்திக்கும் முன், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சோ்ந்த ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT