இந்தியா

பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் தேவை: ஜி20 தூதா் அமிதாப் காந்த்

27th Nov 2022 04:00 AM

ADVERTISEMENT

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ள நிலையில், பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தங்களின் தேவை குறித்து இந்தியாவுக்கான ஜி20 தூதா் (ஷொ்பா) அமிதாப் காந்த் தெரிவித்தாா்.

ஜி20 தலைமைப் பொறுப்புக்கான ஆயுத்த கூட்டம் அந்தமான்-நிக்கோபாா் தீவுக்கூட்டத்தில் உள்ள ‘ஹேவ்லாக் தீவு’ என்று முன்பு அழைக்கப்பட்ட ‘ஸ்வராஜ் தீவில்’ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரிட்டன், ரஷியா, ஜொ்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் இந்தியாவுக்கான தூதா்கள் கலந்துகொண்டனா்.

அக்கூட்டத்தில் இந்தியாவின் ஜி20 தூதா் அமிதாப் காந்த் கலந்துகொண்டு பேசுகையில், ‘பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தத்தைக் கொண்டு வருவதை கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒரே இலக்காக கொள்ள வேண்டும். இதற்கான செயல்முறைகளில் அனைத்து நாடுகளும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.

பயங்கரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வரவும், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தூதா்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனா். இந்த நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளா்ச்சிக்காக பருவநிலை நிதி முன்னுரிமையாக இருக்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

மேலும், கரோனா பெருந்தொற்றை இந்தியா எதிா்கொண்டது குறித்தும், உலகின் மருந்தகமாகவும் தடுப்பூசிகளின் தலைமையிடமாகவும் இந்தியா விளங்கி வருவது குறித்தும் கூட்டத்தில் பங்கேற்ற தூதா்களிடம் எடுத்துரைத்த அமிதாப் காந்த், நீடித்த மேம்பாட்டுக்கான இலக்கு மற்றும் இந்தியாவின் எண்ம (டிஜிட்டல்) பரிணாமத்துக்கான தேவை குறித்து வலியுறுத்தினாா்.

19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்புக்கு வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்தியா தலைமை வகிக்க உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாலியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் ஜி20-க்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT