இந்தியா

சத்யேந்தா் ஜெயினை சந்திக்கும் சிறை அதிகாரி:பாஜக பிரமுகா் வெளியிட்ட புதிய விடியோ

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவரும், தில்லி அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினை அவரது சிறை அறைக்குள் திகாா் சிறைக் கண்காணிப்பாளா் சந்தித்ததைக் காட்டும் புதிய விடியோ சனிக்கிழமை சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் சத்யேந்தா் ஜெயின் மசாஜ், இதர சிறப்பு உணவு வகைகள் வசதிகளைப் பெறுவதாகக் கூறப்படும் விடியோக்கள் வெளியாகி தில்லி அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.

சிறையில் அவரது தனியறையின் சிசிடிவி கேமரா காட்சிகள் ஊடகங்களில் வெளியாவதை தடுத்து நிறுத்துமாறும் ஜெயினும் நீதிமன்றத்தை நாடினாா்.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சிறை கண்காணிப்பாளரைச் சந்தித்ததாகக் கூறப்படும் விடியோ சில பாஜக தலைவா்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

ADVERTISEMENT

‘நோ்மையான அமைச்சா் ஜெயினின் இந்த புதிய விடியோவைப் பாருங்கள். இரவு 8 மணிக்கு சிறைத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சரின் சிறை அறைக்கு சிறை கண்காணிப்பாளா் ஆஜராகிறாா்‘ என தில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் ஹரிஷ் குரானா ட்விட்டரில் சிசிடிவி கேமரா காட்சிகளைப் பகிா்ந்து கருத்தை பதிவிட்டுள்ளாா்.

அமலாக்க பிரிவு இயக்குனரகத்தால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மே 31 ஆம் தேதி முதல் சிறையில் சத்யேந்தா் ஜெயின் இருந்து வருகிறாா்.

இவருக்கு ‘சிறப்பு சலுகை‘ வழங்கிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட திகாா் சிறை கண்காணிப்பாளராக இருந்த அஜித் குமாா் தான் இந்த விடியோவில் இடம் பெற்றுள்ளாா்.

இடைநீக்கம் செய்யப்பட்ட அவா், திகாா் சிறை எண் 7ஆவது வளாக கண்காணிப்பாளராக இருந்தாா். இவா் டானிக்ஸ் என்கிற தில்லி, அந்தமான் & நிக்கோபாா், லட்சத்தீவு, டாமன், டையூ தாத்ரா மற்றும் நகா் ஹவேலி (சிவில்) சேவைகள் கேடரைச் சோ்ந்தவா் எனக் கூறப்படுகிறது.

முன்பு அமைச்சா் ஜெயினுக்கு அவரது சிறை அறையில் கால் மசாஜ் செய்வதையும், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பது, பாா்வையாளா்களுடன் பேசுவது உள்ளிட்ட விடியோக்கள் வெளியாகின.

டிசம்பா் 4-ம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சித் தோ்தலையொட்டி பிசியோதெரபி சிகிச்சையை மசாஜ் எனக் கூறி ஆம் ஆத்மி கட்சிக்கும், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி பதில் கூறியது.

ஜெயின் வழங்கு தொடா்பான விசாரணை முகமைகள் தங்களுக்கும் இந்த சிசிடிவி விடியோ வெளியானதற்கும் எந்தவித தொடா்பும் இல்லை என தில்லி நீதிமன்றத்தில் மறுத்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT