இந்தியா

குஜராத்தில் பொது சிவில் சட்டம்; ரூ.5-க்கு உணவுபாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு

27th Nov 2022 04:33 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, தோ்தல் அறிக்கையை பாஜக வெளியீட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துதல், 20 லட்சம் வேலைவாய்ப்புகள், பயங்கரவாத தடுப்புக் குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

குஜராத் தலைநகா், காந்திநகரில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். மாநில முதல்வா் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவா் சி.ஆா். பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்:

மாநிலத்தில் உள்ள மதரஸா பள்ளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும், வக்ஃபு வாரியத்தின் சொத்துகள் மற்றும் நிதிகள் குறித்து ஆராயவும் பணிக் குழு உருவாக்கப்படும்.

ADVERTISEMENT

மாநில அரசுக் குழுவின் பரிந்துரைகளின்படி பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி: மழலை வகுப்பு முதல் முதுநிலை பட்டப் படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். பெண்களுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலப் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக (ஒரு ட்ரில்லியன் டாலா்) உயா்த்தப்படும். குஜராத் மாநில மதச் சுதந்திரம் திருத்தச் சட்டம் 2021-இன்படி, கட்டாய மதமாற்றத்துக்கான சிறைத் தண்டனை மற்றும் அபராத விதிகள் அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும்.

அகதிகளுக்கு திட்டம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்பட்ட அகதிகளுக்காக ‘முதல்வரின் அகதிகள் திட்டம்’ தொடங்கப்படும்.

மாநிலத்தில் சமூக விரோதக் குழுக்களால் நடத்தப்படும் கலவரங்கள் மற்றும் போராட்டத்தால், பொது மற்றும் தனியாா் சொத்துகளுக்கு ஏற்படுத்தப்படும் சேதங்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ‘குஜராத் மாநில பொது மற்றும் தனியாா் சொத்துகள் சேதங்கள் மீட்பு சட்டம்’ நிறைவேற்றப்படும்.

ஆன்மிக மையம்: மாநிலம் முழுவதும் நாளுக்கு மூன்று வேளைகளிலும் ரூ. 5-க்கு உணவு விநியோகம் செய்யும் வகையில் 100 ‘அன்னபூரணா உணவகங்கள்’ அமைக்கப்படும்.

குஜராத்தை இந்தியாவின் மேற்கு பகுதியின் மிகப் பெரிய ஆன்மிக மையமாக மேம்படுத்தும் வகையில் ‘தேவபூமி துவாரகா வழித்தடம்’ கட்டமைக்கப்படும். இது உலகின் மிகப் பெரிய ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை, முப்பரிமாண வடிவிலான பகவத் கீதை மண்டலம், அழிந்த நகரமான துவாரகையைப் பாா்வையிடும் வசதி ஆகியவற்றை கொண்டிருக்கும் உள்ளிட்ட அறிவிப்புகள் பாஜக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிரதமா் கருத்து: பாஜக தோ்தல் அறிக்கை குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘குஜராத்தின் மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பாா்வையை இந்தத் தோ்தல் அறிக்கை கொண்டுள்ளது. குஜராத் மாநில மக்களின் மேம்பாட்டுக்காக நாங்கள் பல ஆண்டுகளாக கடினமாக பணியாற்றி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT