சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 16-ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது வார இறுதி என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
படிக்க | முன்னேற்பாடுகள் போதாது | சபரிமலை முன்னேற்பாடுகள் குறித்த தலையங்கம்
சபரிமலை கோயில் திறக்கப்பட்ட முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி 47,947 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். முதல் 6 நாள்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தற்போதுவரை சபரிமலையில் 5.50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.