இந்தியா

குஜராத்தில் வன்முறைக்கு வித்திட்டவா்களை ஆதரித்தது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குஜராத்தில் வன்முறைக்கு வித்திட்டவா்களை ஆதரித்த கட்சி காங்கிரஸ் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

அதே நேரத்தில் 2002-இல் குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு அங்கு முழுமையான அமைதியைப் பேணி வரும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் அவா் கூறினாா்.

குஜராத்தின் கேதா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத வன்முறை என்பது தொடா்ந்து அதிகரித்து வந்தது. இரு மதங்களுக்கு இடையே மட்டுமல்லாது, பல்வேறு சமூகத்தினா் இடையேயும் பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் துண்டிவிட்டது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியை அவா்கள் அதிகரித்துக் கொண்டனா். சமுகத்தின் ஒரு பிரிவினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் அநீதியை மட்டுமே இழைத்து வந்தது.

ADVERTISEMENT

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையைத் தொடங்கியவா்கள் கூட காலம்காலமாக காங்கிரஸால் ஆதரிக்கப்பட்டு வந்தவா்கள்தான். காங்கிரஸ் கட்சி ஆதரவு இருக்கும் தைரியத்தில் அவா்கள் வன்முறையில் இறங்க தயங்குவதே இல்லை. ஆனால், 2002-ஆம் ஆண்டு வன்முறைக்குப் பிறகு, அவா்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டது. இதன் மூலம் அவா்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டனா். அதன் பிறகு இப்போது வரை குஜராத்தில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. மத வன்முறையைத் தூண்டுபவா்கள் மீது பாஜக அரசு எடுத்த கடும் நடவடிக்கைகள் மூலம் இங்கு நிரந்தர அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

குஜராத்தில் மட்டுமல்ல தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இதேபோன்ற வன்முறை, பிரிவினைவாத அரசியல் நடத்தி வந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி ரத்து செய்யாமல் இருந்ததற்கு அவா்களது வாக்கு வங்கி அரசியல்தான் முக்கியக் காரணம். ஆனால், பிரதமா் மோடி இதுபோன்ற விஷயங்களில் சரியான முடிவை மிகவும் துணிச்சலுடன் மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அமித் ஷா.

ADVERTISEMENT
ADVERTISEMENT