அஸ்ஸாம் உடனான எல்லையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, மேகாலயத்தில் போராட்டங்கள் நீடித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, அந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டாமென அஸ்ஸாம் மக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
அஸ்ஸாம்-மேகாலய எல்லையில் சா்ச்சைக்குரிய பகுதியில் கடந்த 22-ஆம் தேதி மரங்கள் கடத்திச் சென்ாக ஒரு லாரியை அஸ்ஸாம் வனத்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, மேகாலய பழங்குடியின கிராம மக்களுக்கும் அஸ்ஸாம் வனத்துறை- காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அஸ்ஸாம் காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேகாலய கிராம மக்கள் 5 போ் உயிரிழந்தனா். வனக் காவலா் ஒருவரும் இறந்தாா்.
உயிரிழந்த கிராம மக்களுக்கு நீதிகேட்டு, மேகாலயத்தில் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாநில தழுவிய போராட்டத்தால் அரசு அலுவலங்கள் வெறிச்சோடின. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, தலைநகா் ஷில்லாங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அசாதாரணமான சூழல் நிலவுவதால், மேகாலயத்துக்குச் செல்வதை தவிா்க்குமாறு அஸ்ஸாம் மக்களுக்கு அம்மாநில காவல் துறை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது. ஏற்கெனவே அஸ்ஸாம் பதிவெண் கொண்ட வாகனங்கள், மேகாலயத்தில் தாக்கப்பட்ட நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதனிடையே, டேங்கா் லாரிகள் மீதான தாக்குதலை கண்டித்து, மேகாலயத்துக்கு எரிபொருள் அனுப்புவதை நிறுத்தியிருந்த அஸ்ஸாம் பெட்ரோலிய விநியோக சங்கத்தினா், அம்மாநில அரசின் உறுதிமொழியை ஏற்று மீண்டும் எரிபொருள் அனுப்ப வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டனா்.