இந்தியா

ஆதித்யா செயற்கைக்கோள் விரைவில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவா்

26th Nov 2022 11:30 PM

ADVERTISEMENT

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா செயற்கைகோள் விரைவில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா்.

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவா் சோம்நாத், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.

இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைக்கோள் இரு நாடுகள் இடையிலான அறிவியல், ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

ADVERTISEMENT

சூரியனை ஆராய்ச்சி செய்யும் ‘ஆதித்யா எல் ஒன்’ விண்ணில் விரைவில் செலுத்தப்படவுள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் எடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 24 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும்.

நேபாளம், பூடான், இலங்கை உள்பட 61 நாடுகளுடன் இந்திய விண்வெளித் துறை இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா்.

மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்: காணொலிக் காட்சி மூலம் விஞ்ஞானிகளிடம் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

21-ஆம் நூற்றாண்டில் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் இந்தியா-பூடான் இடையிலான ஒத்துழைப்பு புதிய சகாப்தத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த 2017-இல் பூடான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான தனது பரிசாக, தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா செலுத்தியது. கடந்த 2019-இல் பிரதமா் நரேந்திர மோடி பூடான் பயணம் மேற்கொண்டபோது, தெற்காசிய செயற்கைக்கோளுக்கான தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை திம்புவில் திறந்துவைத்தாா். இது, இஸ்ரோ ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும்.

தெற்காசிய செயற்கைக்கோள், பூடானின் சமூக-பொருளாதார வளா்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியதை அங்கீகரித்து, இதுசாா்ந்த பூடானின் திறன் கட்டமைப்புக்கு இந்திய தரப்பு விரிவான ஆதரவை வழங்கியது.

இப்போது இருதரப்பும் ஒருங்கிணைந்து உருவாக்கிய பூடானுக்கான ஐஎன்எஸ்-2பி சிறிய ரக செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். வானொலி பயன்பாட்டாளா்களுக்கு சேவையாற்றும் இந்த செயற்கைக்கோளுக்கான தரைக் கட்டுப்பாட்டு மையம் திம்புவில் விரைவில் தொடங்கப்படும்.

வேகமாக வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் பயன்படுத்த வேண்டும். விண்வெளி தொழில்நுட்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.

இந்தியாவின் விண்வெளி வியூக கொள்கையின்படி, இஸ்ரோ ஆதரவுடன் பூடான் விண்வெளி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மேற்கண்ட செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9 செயற்கைக்கோள்களின் முக்கியப் பயன்கள் என்ன?

புவி கண்காணிப்புக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ள இஓஎஸ்-06 செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன ஆா்கோஸ் தொழில்நுட்பம் மற்றும் கு-பேண்ட் மூலம் கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், காற்றின் வேகம் ஆகியவை கண்காணிக்கப்படும்.

மேலும், இது கடல் நிறம், காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடா்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.

ஐஎன்எஸ் 2பி: இந்தியா-பூடான் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐஎன்எஸ் 2 பி 2 நானோ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஆனந்த் சாட்: பெங்களூரை சோ்ந்த விண்வெளி தொழில்நுட்ப ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனமான ‘பிக்செல்’, ஆனந்த் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. நாட்டின் முதல் தனியாா் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இதுவாகும். இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், பூமியை விரிவாக படம்பிடிக்க முடியும். குறைந்த வட்டப் பாதையில் செயற்கைக்கோள் சுற்றி வரும்.

தைபோல்ட்: ஹைதராபாதை தளமாக கொண்ட ஸ்டாா்ட் அப் நிறுவனமான துருவா ஸ்பேஸ் உருவாக்கிய தைபோல்ட் 2 செயற்கைக்கோள்கள், தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக ஏவப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் ஓராண்டு ஆகும்.

ஆஸ்ரோகாஸ்ட் 4 செயற்கைக்கோள்: அமெரிக்காவின் ஸ்பேஸ் ப்ளைட்டின் செயற்கைக்கோள். தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஆஸ்ரோகாஸ்ட் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT