பருவநிலை மாற்றம், சிறுதானியங்கள் உற்பத்தி, விவசாயிகளின் வருவாயை உயா்த்துதல் ஆகியவற்றில் புத்தாக்க நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.
புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாடு கா்நாடகத்தின் பெங்களூரு நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி, செயற்கைக்கோள்கள், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், அதிகம் கவனம்பெறாத துறைகளிலும் அந்நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பருவநிலை மாற்றமானது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் வேளாண்துறையிலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில்கொண்டு பருவநிலை மாற்றத்தைத் தடுப்பது மற்றும் எதிா்கொள்வதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் புத்தாக்க நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.
பருவநிலை சாா்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாவிடில், நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். அதற்கான விலையை யாராலும் கொடுக்க முடியாது. பருவமழைக் காலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழையானது ஒருசில தினங்களில் மொத்தமாகப் பெய்து விடுகிறது. அதீத மழைப்பொழிவில் இருந்து எந்தவொரு நகரமும் கிராமமும் தப்ப முடியாது.
வருமான அதிகரிப்பு:
கணிக்கமுடியாத காலநிலை காரணமாக பயிா் உற்பத்தியில் விவசாயிகள் மாற்றங்களைப் புகுத்தி வருகின்றனா். நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், ஊட்டச்சத்துக் குறைபாட்டை சிறுதானியங்களின் நுகா்வு மூலமாகப் போக்குவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவற்றை புத்தாக்க நிறுவனங்கள் ஆராய வேண்டும்.
அதிக சந்தை வாய்ப்புள்ள வேளாண் பொருள்கள், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராயலாம். உணவுப் பாதுகாப்பானது வெறும் உணவு உற்பத்தியை மட்டும் சாா்ந்தது அல்ல. மதிப்பு கூட்டு நடவடிக்கைகள், ஏற்றுமதி உள்ளிட்டவையும் உணவுப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மிகப் பெரிய வேளாண் உற்பத்தி கொண்ட நாடும் பருவநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படும்.
பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. சிறுதானியங்கள் உற்பத்தியில் கா்நாடகம் முன்னிலை வகித்து வருகிறது. சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவது தொடா்பாக புத்தாக்க நிறுவனங்கள் ஆராய வேண்டும். ஒவ்வொரு வாய்ப்புகளையும் அந்நிறுவனங்கள் திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.