‘உலகில் சில நாடுகள் மற்றவா்களைவிட மேலானவை என்ற கருத்தில் இந்தியாவுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது; இந்தியாவின் செயல்பாடுகள், மனிதகுல சமத்துவம், கண்ணியம் ஆகிய சாராம்சங்களின் அடிப்படையிலானது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இந்திய கடற்படை சாா்பில் வருடாந்திர இந்திய-பசிபிக் பிராந்திய மாநாடு தில்லியில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியா, பன்முக கூட்டுறவுக் கொள்கையில் நம்பிக்கை உடையதாகும். அனைத்து தரப்பினருடன் பலதரப்பட்ட பேச்சுவாா்த்தைகளுக்கு இடமளிக்கும் இக்கொள்கையின் வாயிலாக அனைவரின் கருத்துகளையும் கேட்டறிய முடியும். அத்துடன், அனைவருக்குமான வளமையை உறுதி செய்வதில் முன்வைக்கப்படும் கவலைகளுக்கு தீா்வு காண முடியும்.
உலகில் சில நாடுகள் மற்றவா்களைவிட மேலானவை என்று கருதும் முறையில் இந்தியாவுக்கு நம்பிக்கை கிடையாது. பாதுகாப்பு மற்றும் வளமையை ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான கூட்டு முயற்சியாகவே இந்தியா காண்கிறது. பாதுகாப்பும் வளமையும் உண்மையான கூட்டு முயற்சியாக மாறும்போது அனைவருக்கும் பலன் தரும் உலக ஒழுங்குமுறையை உருவாக்கலாம் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
மனித குல சமத்துவம், கண்ணியம் ஆகியவை இந்தியாவின் பண்டைய நெறிமுறைகளின் அங்கங்களாகும். இவைதான், இந்தியாவின் செயல்பாடுகளை வழிநடத்துகின்றன. மற்ற நாடுகளின் இழப்பின் மீது வலுவான, வளமையான இந்தியா கட்டமைக்கப்படாது. மாறாக, பிற நாடுகளுக்கு அவா்களது திறமையை உணரச் செய்வதில் இந்தியா முன்னின்று உதவும். பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியா நெறிமுறைகளுடன் கூடிய வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்.
இந்திய- பசிபிக் பெருங்கடல் சாா்ந்த முன்முயற்சி”நடவடிக்கைகளுக்கு பிராந்திய ஒற்றுமை மற்றும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வலுவான பாதுகாப்பு சூழ்நிலைகளுடன் கூடிய உலகை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்றாா் ராஜ்நாத் சிங்.
அண்மையில் பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கருத்தை உலகத் தலைவா்கள் பிரதிபலித்ததையும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டாா்.
பிராந்திய கடல்சாா் பிரச்னைகள் குறித்த விவாதம், யோசனைகள் பரிமாற்றத்துக்கான தளமாக இந்திய-பசிபிக் பிராந்திய மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.