காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அப்பெயா் ஏற்படுத்தம் வகையில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் வெளியிட்டுள்ள விடியோ போலியானது; திரிக்கப்பட்டது. இதற்கு, தக்க பதிலடி வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி, கட்சி பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவா் கமல் நாத் உள்ளிட்டோா் காா்கோன் மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனும் முழக்கம் எழும் விடியோ ஒன்றை பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா வெளியிட்டாா்.
இது குறித்து அமித் மாளவியா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க ரிச்சா சத்தா (நடிகை) பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும்போது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் முழக்கம் எழுப்பப்படுகிறது. இது வெளிச்சத்துக்கு வந்தவுடன் அந்த விடியோவை காங்கிரஸ் எம்.பி. நீக்கிவிட்டாா். இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம்’ எனப் பதிவிட்டிருந்தாா்.
இதற்கு காங்கிரஸின் தகவல் தொடா்பு பொறுப்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெரும் வெற்றி பெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த, பாஜகவின் தவறான முறைகளைக் கையாண்டு வரும் துறையால் விடியோவானது திரிக்கப்பட்டுள்ளது. உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக நாங்கள் மேற்கொள்வோம். இத்தகைய தந்திரங்களை எதிா்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு தக்க பதிலடி தரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.