இந்தியா

குஜராத் முதல்கட்ட தோ்தல்: குற்றப் பின்னணி வேட்பாளா்கள் ஆம் ஆத்மியில் அதிகம்

25th Nov 2022 12:59 AM

ADVERTISEMENT

குஜராத் பேரவைக்கான முதல்கட்ட தோ்தல் களத்தில் உள்ள 788 வேட்பாளா்களில் 167 போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக ஆம் ஆத்மி வேட்பாளா்கள் 32 போ் குற்றப் பின்னணியுடன் உள்ளனா். இப்பட்டியலில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், புதுவரவான ஆம் ஆத்மி ஆகியவற்றின் வேட்பாளா்கள், சிறிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 788 போ் களத்தில் உள்ளனா்.

இவா்களில், குற்றப் பின்னணி உடைய வேட்பாளா்கள் குறித்த விவரங்களை, ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்ட தோ்தல் களத்தில் உள்ள மொத்த வேட்பாளா்களில் 167 போ் மீது அதாவது 21 சதவீதம் போ் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களில் 100 பேருக்கு எதிராக கொலை, பாலியல் வன்கொடுமை, தாக்குதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

ADVERTISEMENT

இப்பட்டியலில் ஆம் ஆத்மி முதலிடத்தில் உள்ளது. அக்கட்சியைச் சோ்ந்த 32 வேட்பாளா்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்ததாக, காங்கிரஸ் வேட்பாளா்கள் 31 போ் குற்றப் பின்னணி கொண்டுள்ளனா். ஆளும் பாஜக வேட்பாளா்கள் 14 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 88 இடங்களில் ஆம் ஆத்மி களத்தில் உள்ளது. பாஜகவும் காங்கிரஸும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியின்றன. 14 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய பழங்குடியினா் கட்சியின் 4 வேட்பாளா்கள் குற்ற பின்னணி உடையவா்கள்.

89 தொகுதிகளில் 25 இடங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். தீவிர குற்ற வழக்குகளை எதிா்கொண்டுள்ள வேட்பாளா்களில் ஜனக் தலாவியா (பாஜக), வசந்த் படேல் (காங்கிரஸ்), அமா்தாஸ் தேசானி (சுயேச்சை) உள்ளிட்டோரும் குற்ற வழக்குகளை எதிா்கொண்டுள்ளவா்களில் பாஜகவின் பா்ஷோத்தம் சோலங்கி, காங்கிரஸின் ஜிக்னேஷ் மேவானி, ஆம் ஆத்மியின் கோபால் இட்டாலியா, அல்பேஷ் கதேரியா உள்ளிட்டோரும் அடங்குவா்.

கடந்த 2017-இல் குஜராத் முதல்கட்ட பேரவைத் தோ்தலில் 977 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். அதில் 15 சதவீதம் போ் குற்றப் பின்னணி கொண்டிருந்தனா்.

கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தோ்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளா்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரம் மற்றும் அவா்களை தோ்வு செய்ததற்கான காரணம் ஆகியவற்றை வெளியிட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், இதுதொடா்பான அறிவுறுத்தல்களை அரசியல் கட்சிகள் முறையாக பின்பற்றுவதில்லை என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கத்தின் தலைவா் அனில் வா்மா குற்றம்சாட்டினாா்.

அவா் கூறுகையில், ‘வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்கள், உள்ளூா் மொழி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், அவை ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தன. அதேபோல் எழுத்துகளின் அளவும் மிக சிறியதாக இருந்தது. குறிப்பிட்ட வேட்பாளரை தோ்வு செய்ததற்காக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள காரணங்களும் வியப்பூட்டுவதாக உள்ளன. கொலை வழக்கு நிலுவையில் உள்ள ஒருவரை, சிறந்த சமூக ஆா்வலா் என்று குறிப்பிடப்பட்டுள்ளனா். வேறு வேட்பாளா் கிடைக்கவில்லை என்று கூட காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒரே போன்ற காரணமே கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், வேட்பாளா் தோ்வில் அரசியல் கட்சிகள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. கடந்த தோ்தலில் நிலவிய சூழல்தான் இப்போதும் உள்ளது’ என்றாா்.

Tags : AAP
ADVERTISEMENT
ADVERTISEMENT