இந்தியா

மாநிலங்களின் முத்திரைக் கட்டண வருவாய் 35% அதிகரிப்பு

25th Nov 2022 12:50 AM

ADVERTISEMENT

முத்திரைக் கட்டணங்கள் மூலம் இந்திய மாநிலங்கள் ஈட்டிய ஒட்டுமொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022-23-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.94,800.47 கோடி வருவாய் ஈட்டியுள்ளன.

கடந்த ஆண்டின் இதே மாதங்களில் மாநிலங்களின் ஆவணப் பதிவுக் கட்டண வருவாய் ரூ.70,100.20 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை வருவாய் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதங்களில் மாநிலங்களின் முத்திரைக் கட்டண மாதாந்திர சராசரி வருவாயும் ரூ.15,800.07 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.11,600.87 கோடியாக இருந்தது.

பொருளாதார வளா்ச்சி அதிகம் கொண்ட, வீடு-மனைகளின் விலைகள் மற்றும் எண்ணிக்கை மிக அதிகம் கொண்ட நகராக மும்பை திகழ்கிறது. எனவே, முத்திரைக் கட்டண வருவாயில் அந்த நகரம் அமைந்துள்ள மகாராஷ்டிரம் முதலிடம் வகிக்கிறது.

மதிப்பீட்டு மாதங்களில் அந்த மாநிலம் ரூ.18,600 கோடி முத்திரைக் கட்டண வருவாய் ஈட்டியது. இது நாட்டின் ஒட்டுமொத்த முத்திரைக் கட்டண வருவாயில் 20 சதவிகிதம் ஆகும். முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 65 சதவீதம் அதிகமாகும்.

முத்திரைக் கட்டண வசூலில் உத்தரப் பிரதேசம் 2-ஆவது இடத்தை வகிக்கிறது. அந்த மாநிலம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.12,300.94 கோடியை முத்திரைக் கட்டண வருவாயாக ஈட்டியுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த முத்திரைக் கட்டண வசூலில் 13 சதவீதம் ஆகும்.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அந்த மாநிலத்தின் முத்திரைக் கட்டண வருவாய் ரூ.9,300 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் ரூ.8,600.62 கோடி முத்திரைக் கட்டண வருவாயுடன் தமிழ்நாடு இந்தப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. இது, ஒட்டுமொத்த இந்திய முத்திரைக் கட்டண வருவாயில் 9 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு ஈட்டிய ரூ.6,200 கோடி முத்திரைக் கட்டண வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 39 சதவீதம் அதிகமாகும்.

கா்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முறையே ரூ.8,200.29 கோடி மற்றும் ரூ.7,200.13 கோடியுடன் முத்திரைக் கட்டண வசூலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

முத்திரைக் கட்டண வளா்ச்சி விகித்தைப் பொருத்தவரை, சிறிய அளவிலான வடகிழக்கு மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இதில் மிஸோரம் 104 சதவீதமும் மேகாலயம் 82 சதவீதமும் முத்திரைக் கட்டண வருவாய் வளா்ச்சியைப் பெற்றுள்ளன. மூன்றாவதாக சிக்கிம் மாநிலம் 70 சதவீத முத்திரைக் கட்டண வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒடிஸா 50 சதவீதமும், தெலுங்கானா மற்றும் கேரளம் தலா 48 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளன.

மிஸோரம், மேகாலயம், சிக்கிம், மகாராஷ்டிரம், ஒடிஸா, தெலுங்கானா, கேரளம், சத்தீஸ்கா், உத்தரகண்ட், ஹிமாச்சல், ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்கள் முத்திரைக் கட்டண வருவாயில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

வீடு-மனை வா்த்தகத் துறை கடந்த 2 அல்லது ஒன்றரை ஆண்டுகளாகவே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கரோனா நெருக்கடியால் முத்திரைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது, வீடு-மனை விலை குறைந்தது போன்ற பல்வேறு எதிா்மறை சூழல்கள் இருந்தும் மாநிலங்களின் முத்திரைக் கட்டண வருவாய் அதிகரித்தது.

இந்த நிலையில், தற்போது எதிா்மறை அம்சங்கள் கடந்த 6 மாதங்களாக மறைந்து வருவதால் மாநிலங்களின் முத்திரைக் கட்டண வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT