இந்தியா

ஆதாா் தகவலை ஏற்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும்

25th Nov 2022 01:02 AM

ADVERTISEMENT

தனிநபா்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக ஆதாா் தகவலை ஏற்பதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் இந்தியத் தனிநபா் அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள 135 கோடிக்கும் அதிகமான நபா்களுக்கு ஆதாா் அட்டையை யுஐடிஏஐ இதுவரை விநியோகித்துள்ளது. தனிநபா்களின் தரவுகளை உறுதிப்படுத்த ஆதாா் எண்ணை அரசுகளும் பல்வேறு நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. சுமாா் 1,000 அரசுத் திட்டங்களில் அடையாளத்தை உறுதி செய்வதற்காக ஆதாா் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யுஐடிஏஐ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்காக தனிநபரின் அனுமதியைப் பெற்று ஆதாா் தகவலை உறுதி செய்வது வரவேற்கத்தக்கது. அதற்காகத் தனிநபா்கள் வழங்கும் ஆதாா் அட்டை, ஆதாா் கடிதம், மின்னணு ஆதாா் உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

அடையாளத்தை உறுதி செய்வதற்காக ஆதாா் விவரங்கள் வழங்கப்படும்போது, அவற்றை ஏற்பதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை மாநில அரசுகளும் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். ஆதாரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்க இந்நடவடிக்கை உதவும்.

ADVERTISEMENT

தனிநபா்கள் வழங்கும் 12 இலக்க எண் அனைத்தையும் ஆதாா் எண் என சம்பந்தப்பட்ட அமைப்புகள் கருதிவிடக் கூடாது. அதை முறைப்படி உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதாரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எம்ஆதாா் செயலி உள்ளிட்டவற்றின் வாயிலாக ஆதாா் விவரங்களை எளிதில் உறுதிப்படுத்த முடியும். அந்தச் செயலியை எளிதில் பதிவிறக்கம் செய்யவும் இயலும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT