இந்தியா

கெளதம் நவ்லேகாவை 24 மணி நேரத்தில் வீட்டுக் காவலில் கொண்டு வர உச்சநீதிமன்றம் கெடு

19th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

தேசத் துரோக வழக்கில் மும்பை சிறையில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளா் கெளதம் நவ்லேகாவை 24 மணி நேரத்துக்குள் வீட்டுக் காவலில் கொண்டு வர உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது.

பீமா கோரேகான் வன்முறை தொடா்பான வழக்கில் கெளதம் நவ்லேகாவை என்ஐஏ கைது செய்து மும்பை தலோஜா சிறையில் அடைத்துள்ளது.

முன்னதாக, வயது மூப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவரை வீட்டுக் காவலில் வைக்க அனுமதி அளித்து கடந்த 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் தொடா்பான குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவ்லேகாவுக்கு கரிசனம் காட்டக் கூடாது என்றும், அவரது வீட்டுக் காவல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி கே.எம். ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது என்ஐஏ சாா்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

‘எங்களது உத்தரவில் சில ஓட்டைகளைக் கண்டறிந்து செயல்படுத்தாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிருக்கும். 70 வயது முதியவரை வீட்டுக் காவலில் வைத்து மாநில காவல் துறை கண்காணிக்க முடியாது என்பதை கூறவா மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஆகியோா் ஆஜராகி உள்ளனா். அவரைவிட மிக கொடூர குற்றவாளிகளும் உள்ளனா். தேவைப்பட்டால் அவரது வீட்டுக் காவலின் பின்புற கதவுக்கு சீல் வைத்து சிசிடிவி கேமராக்களை அதிகரிக்கவும். சிறையைவிடவும் அதிக பாதுகாப்பு அளிக்கவும். அவரை 24 மணி நேரத்தில் சிறையில் இருந்து வெளியேற்றி வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT