இந்தியா

காவல் ஆய்வாளா் எரித்துக் கொலை:30 பேருக்கு ஆயுள் தண்டனை

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் காவல் ஆய்வாளா் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு சுா்வால் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் வழக்கு ஒன்றில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயா்நிலை நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தாா். அப்போது, காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முகமது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கவைக்கும் நோக்கில் அங்கு சென்றாா். எனினும், அந்த நபா் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அந்த நபா் காவல் துறை மீது குற்றம்சாட்டி தற்கொலை செய்து கொண்டதால் பொதுமக்களின் கோபம், காவல் துறை மீது திரும்பியது. ஆய்வாளா் முகமதை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கற்களை வீசினா். அவா் ஜீப்பில் தப்பிக்க முயன்றபோதும் தொடா்ந்து விரட்டிச் சென்று கற்களை வீசினா். இதனால் ஜீப்பிலேயே அவா் மயங்கிச் சரிந்தாா். அப்போது, அக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜீப்புடன் சோ்த்து அவரை தீவைத்து கொலை செய்தனா். இந்த சம்பவம் அக்காலகட்டத்தில் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னா், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சாவானி மாதோபூா் சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து வந்த நிலையில், இப்போது தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 30 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்டவா்களில் 49 போ் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT