‘கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தம் காரணமாக விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்தி முற்றிலும் தவறான தகவல்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘உரிய விஞ்ஞான அணுகுமுறை மற்றும் நடைமுறைகளுக்கு உள்பட்டே கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது’ என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு புணேயில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியும், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியுமே செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பெரும்பாலான நாடுகள் அங்கீகாரம் அளித்த நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசியை ஆரம்பத்தில் அங்கீகரிக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னரே அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிா்வாகம் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவிலும் கோவேக்ஸின் செலுத்திக்கொள்ள மக்களிடையே தயக்கம் எழுந்தது.
இந்தச் சூழலில், ‘பயோடெக் நிறுவனம் அரசியல் அழுத்தம் காரணமாக கோவேக்ஸின் தடுப்பூசி மீதான மருத்துவ சோதனைகளை விரைவுபடுத்துவதற்காக, பின்பற்றப்பட வேண்டிய குறிப்பிட்ட நடைமுறைகளைத் தவிா்த்துவிட்டது. தடுப்பூசி மீதான மூன்று கட்ட மருத்துவப் பரிசோதனையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன’ என்று ஊடகத்தில் அண்மையில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களிடையே பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், கோவேக்ஸின் குறித்த ஊடகச் செய்தி தவறானது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவேக்ஸின் தொடா்பாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி முற்றிலும் தவறானது. அந்தத் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் அளித்ததில் மத்திய அரசும், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் உரிய விஞ்ஞான அணுகுமுறைகளையும், நடைமுறைகளையும் முழுமையாக பின்பற்றியுள்ளன.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, பரிந்துரை அளித்ததன் அடிப்படையிலேயே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் கேவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிபுணா் குழு நுரையீரல் பாதிப்பு, நோய் எதிா்ப்பு சக்தி, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தைகள் நலன், உள் மருந்தியல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிபுணா்களை உள்ளடக்கியதாகும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.