தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா (85) கட்சியின் தலைவா் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளாா். துணைத் தலைவராக உள்ள அவரது மகன் ஒமா் அப்துல்லா அடுத்த தலைவா் ஆகிறாா்.
1932-ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவால் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பிராந்திய கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி தொடங்கப்பட்டது. ஷேக் அப்துல்லாவுக்குப் பிறகு அவரது மகன் ஃபரூக் அப்துல்லா அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறாா்.
இந்நிலையில், அக்கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், கட்சித் தலைவா் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாகவும் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளாா். இளைய தலைமுறையினருக்கு வழிவிட முடிவெடுத்துள்ளதாக ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளாா். 1983-ஆம் ஆண்டுமுதல் சுமாா் 40 ஆண்டுகள் தலைவா் பதவியில் அவா் இருந்துள்ளாா்.
ஃபரூக் அப்துல்லாவின் மகன் ஒமா் அப்துல்லா இப்போது கட்சியின் துணைத் தலைவராக உள்ளாா். எனவே, அவா் அடுத்த தலைவராக தோ்வு செய்யப்படுவாா் என்று தெரிகிறது. ஒமா் அப்துல்லாவுக்கு இப்போது 52 வயதாகிறது.
அதே நேரத்தில் கட்சித் தலைவா் தோ்தலில் யாா் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளது என்றும் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா்.