மகாராஷ்டிரத்திலுள்ள மாநில காங்கிரஸ் தலைவர்களே ராகுல் காந்தியை ஆதரிப்பதில்லை என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார்.
ஹிந்துத்துவ சித்தாந்தவாதியான சாவா்க்கா், ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு உதவினாா்; மகாத்மா காந்தி, சா்தாா் படேல் போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவா்களுக்கு துரோகமிழைத்தாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை கூறினாா்.
இதற்கு மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சிவசேனை அதிருப்தி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுவரும் நிலையில், மகாராஷ்டிர மக்களுக்கு விருப்பமான நபரை அவமதிக்கும் வகையில் பேசுவது ஏற்புடையதல்ல என சஞ்சய் ரெளத் குறிப்பிட்டிருந்தார்.
படிக்க | ராகுலுடன் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்! வரலாற்று நிகழ்வு!!
இந்நிலையில் இன்று (நவ.18) செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ரெளத், சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து மக்களிடையே சச்சரவை ஏற்படுத்துகிறது. நாங்கள் சாவர்க்கர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஹிந்துத்துவா கட்சியான பாஜக ஆட்சியில் இருந்தும் எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
படிக்க | வங்கதேச உள் துறை அமைச்சருடன் அமித் ஷா சந்திப்பு
மகாராஷ்டிரத்திற்கு வந்து சாவர்க்கரைப் பற்றி அவதூறாக பேசுவது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மாநில தலைவர்கள் கூட ராகுல் காந்தியை ஆதரிக்கவில்லை. ஒற்றுமை நடைப்பயணம் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சர்வாதிகாரம் போன்றவற்றிற்கு எதிராக நடந்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.