பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தோ்தல் நிதிப் பத்திரங்கள் கடந்த 2018-இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை ரூ.10,246 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையாகியுள்ளதாக ஆா்டிஐ தகவலில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் நடைமுறையை பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018, மாா்ச்சில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களின் முதல் 10 நாள்களுக்கு எஸ்பிஐ-யின் 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை, லக்னெள, சிம்லா, டேராடூன், கொல்கத்தா, குவாஹாட்டி, பாட்னா, புது தில்லி, சண்டீகா், ஸ்ரீநகா், காந்திநகா், போபால், ராய்ப்பூா், மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ கிளைகளில், ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய குடிமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இவற்றை வாங்கி, கட்சிகளுக்கு நன்கொடையாக செலுத்தலாம்.
வாங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்கு தோ்தல் நிதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும். அந்த அவகாசத்துக்குப் பிறகு நிதிப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் நிதியைப் பெற முடியாது.
இந்நிலையில், கடந்த 2018 முதல் இதுவரை ரூ.10,246 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு எஸ்பிஐ பதிலளித்துள்ளது.
விற்பனையான மொத்தப் பத்திரங்களில் 93.5 சதவீதம் ரூ.1 கோடி மதிப்பிலானவை ஆகும். ரூ.1லட்சம், ரூ.10,000, ரூ.1,000 மதிப்பில் விற்பனையான பத்திரங்கள் வெறும் 0.25 சதவீதமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரிய வராது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தன்னாா்வ அமைப்புகளும் எதிா்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.