இந்தியா

அமலாக்கத் துறை இயக்குநரின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு:விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

18th Nov 2022 11:51 PM

ADVERTISEMENT

அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு வியாழக்கிழமை நீட்டித்த நிலையில், இதுதொடா்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கெளல் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இதற்கான காரணத்தை நீதிபதி எஸ்.கே. கெளல் தெரிவிக்கவில்லை என்றாலும், சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு மீண்டும் வழங்கக் கூடாது என்று அவா் இடம்பெற்றிருந்த அமா்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அமலாக்கத் துறை (ஈடி), மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இயக்குநா்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்ய கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, ‘காமன் காஸ்’ தொண்டு அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

அதில், ‘மிகவும் அரிதான விவகாரங்களில்தான் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். அதுவும் சிறிது காலத்துக்கு மட்டுமாக இருக்க வேண்டும். சஞ்சய் குமாா் மிஸ்ராவுக்கு மேலும் நீட்டிப்பு வழங்கக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மூன்றாவது முறையாக மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்து வரும் நீதிபதிகள் எஸ்.கே. கெளல், ஏ.எஸ். ஓகா அமா்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை ஏமாற்றும் வகையில் மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநருக்கு மூன்றாவது முறையாக புதிதாக பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது’ என்றாா்.

அப்போது, ‘இந்த வழக்கை தான் இடம்பெறாத அமா்வு முன் பட்டியலிட வேண்டும்’ என்று நீதிபதி எஸ்.கே. கெளல் தெரிவித்தாா்.

இதையடுத்து, ‘இந்த வழக்கை மனுதாரா்கள் அவசரமாக விசாரிக்கக் கோருவதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு உத்தரவுக்காக அனுப்பப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவு பிறப்பித்தது.

1984-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய் துறை அதிகாரியான மிஸ்ராவுக்கு (62) முன்றாவது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி, இரு ஆண்டுகளுக்கு என அமலாக்கத் துறையின் இயக்குநராக மத்திய அரசால் மிஸ்ரா நியமிக்கப்பட்டாா்.

பின்னா், 2 ஆண்டுகளை மூன்றாண்டுகளாக நீட்டிப்பதாக கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி முதல் முறையாக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அவசர சட்டம் மூலம் இரண்டாவது முறையாக நீட்டித்தது. இதையடுத்து, மூன்றாவது முறையாக மிஸ்ராவுக்கு ஓராண்டு பணி நீட்டித்து மத்திய அரசு வியாழக்கிழமை அரசாணை பிறப்பித்தது.

இதன்படி, 2013, நவம்பா் 13-ஆம் தேதி வரையில் மிஸ்ரா அமலாக்கத் துறை தலைவா் பதவியில் நீடிப்பாா்.

மிஸ்ராவின் பதவிக் காலத்தில், காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவருடைய கணவா் ராபா்ட் வதேரா மற்றும் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே. சிவகுமாா், மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT