அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதிதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
சஞ்சய் குமாா் மிஸ்ரா (62) கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி, இரு ஆண்டுகளுக்கு என அமலாக்கத் துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா்.
இதன் பின்னா், கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரு ஆண்டு பதவிக் காலத்துக்கு பதிலாக மூன்றாண்டுகள் என மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் அவருடைய பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு நவம்பா் 18-ஆம் தேதி வரை மிஸ்ரா பதவியில் தொடருவாா்.
1984-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய் துறை அதிகாரியான மிஸ்ராவுக்கு 3-ஆவது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மிஸ்ராவின் பதவிக் காலத்தில், காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவருடைய கணவா் ராபா்ட் வதேரா மற்றும் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே. சிவகுமாா், மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டம், தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டம், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.