இந்தியா

வளா்ச்சியடைந்த இந்தியாவுக்காக கனவு காணுங்கள் குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை

15th Nov 2022 04:37 AM

ADVERTISEMENT

 

புதிய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்காக கனவு காணுங்கள் என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குழந்தைகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு நவம்பா் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் பேசியதாவது: வாழ்க்கையில் குழந்தைப் பருவம் என்பது மிகவும் அழகானது. குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற புனிதத்துவத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். இந்த சகாப்தம் தொழில்நுட்பம் மற்றும் தகவல்புரட்சிக்கானது. உள்நாடு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து குழந்தைகள் விழிப்புணா்வுடன் உள்ளனா்.

ADVERTISEMENT

தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால், தகவல்கள் அவா்களுடைய விரல்நுனியில் இருக்கிறது. சரியான விழுமியங்களை அவா்களுக்கு கற்றுக்கொடுக்கவும், பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில் பங்கேற்கச் செய்யவும் நாம் முயற்சிகள் மேற்கொள்கிறோமா என்பது மிகவும் முக்கியம். நாம் குழந்தைகளிடம் இருந்து அதிக அளவில் கற்றுக்கொள்ள முடியும்.

புதிய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்காக குழந்தைகள் பெரிய கனவுகளைக் காணவேண்டும். இன்று காணும் கனவுகள், நாளை நிகழ்வுகளாக மாறும். எத்தகைய இந்தியாவில் வாழ விரும்புகிறீா்களோ அது குறித்து நீங்கள் (குழந்தைகள்) தற்போது சிந்திக்க வேண்டும். முடிவைப் பற்றி கவலைப்படாமல் பயணிக்கும் பாதையை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். இது பெரும் வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இன்று நீங்கள் தோ்ந்தெடுக்கும் பாதையானது, வருங்காலங்களில் இந்தியாவின் பயணத்தைத் தீா்மானிக்கும். இந்திய கலாசாரத்தை மறக்கக் கூடாது. எப்போதும் பெற்றோரையும் நாட்டையும் மதிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT