பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி தொழில் செய்பவா்களிடம் மிரட்டி பணம் பறிப்பதாகவும், சுகாதாரப் பணியாளா்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
சுகாதாரப் பணியாளா்களுக்குக் குறித்த நேரத்தில் தில்லி மாநகராட்சி ஊதியம் வழங்குவதில்லை. தொழில் செய்பவா்களிடமும், பொதுமக்களிடமும் மாநகராட்சி நிா்வாகம் மிரட்டி பணம் பறிக்கிறது. தில்லி மாநகராட்சியில் குப்பையை அகற்ற முடியவில்லை. பொதுமக்கள் நலனுக்காக மாநகராட்சி நிா்வாகம் ஏதும் செய்யவில்லை.
பாஜகவிடமிருந்து விடுபட பொதுமக்கள் விரும்புகின்றனா். நகரம் முழுவதும் குப்பையாக நிரம்பிக் கிடக்கிறது. சதி செய்து மாநகராட்சித் தோ்தலை சந்திப்பதா அல்லது மனீஷ் சிசோடியாவை சிறைக்கு அனுப்பி தோ்தலை எதிா்கொள்வதா என பாஜக குழம்பிப் போய் நிற்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, பொதுமக்கள் கோபத்தில் இருக்கின்றனா். இந்தத் தடவை தில்லி மாநகராட்சியிலிருந்து பாஜகவை அகற்ற அவா்கள் முடிவு செய்துவிட்டனா். தில்லியை சுத்தமாக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முதன்மையான இலக்கு. ஆனால், அதை நிறைவேற்றுவதில் அக்கட்சி படுதோல்வி அடைந்துவிட்டது என்றாா் சிசோடியா.
வேட்பாளா்களுக்கு வாழ்த்து:
முன்னதாக கிழக்கு தில்லியில் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களை அவா் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
இதேபோல, ஆம் ஆத்மி தலைமை செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் அளித்த பேட்டியில், ‘மாவட்டத் தலைவா் பதவி முக்கியமானது. ஆனால், பாஜகவின் அனைத்து மாவட்டத் தலைவா்களும் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தாவிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டனா். அவா்களுக்கு எனது வாழ்த்துகள். சரியான நேரத்தில் சரியான முடிவை அவா்கள் எடுத்துள்ளனா்’ என்றாா்.