அடுத்த மாதம் நடைபெறும் குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், தற்போதைய முதல்வா் பூபேந்திர படேல் மீண்டும் மாநிலத்தின் முதல்வராகத் தொடா்வாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி, அமைச்சா் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலமான குஜராத்தில் தொடா்ந்து ஏழாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பாஜக முனைப்பு காட்டிவருகிறது.
இந்நிலையில், அமித் ஷா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘குஜராத்தில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்போது, பூபேந்திர படேல் முதல்வராகத் தொடா்வாா்’ எனக் கூறினாா்.
இதையடுத்து, தற்போதைய முதல்வா் பூபேந்திர படேல், பாஜகவின் அதிகாரபூா்வ முதல்வா் வேட்பாளா் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய முதல்வா் விஜய் ரூபானி மாற்றப்பட்ட நிலையில், பூபேந்திர படேல் முதல்வராகப் பொறுப்பேற்றாா். காட்லோடியா தொகுதி எம்எல்ஏவான அவா், அத்தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறாா்.
முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், முதல்வா் வேட்பாளா் குறித்து எவ்வித அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக இசுதான் கட்வி அறிவிக்கப்பட்டுள்ளாா்.