இந்தியா

ராஜஸ்தான் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: பயங்கரவாத சதியா? தீவிர விசாரணை

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகமதாபாத்-உதய்ப்பூா் விரைவு ரயில் பயணிக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் பயங்கரவாத சதி உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக காவல் துறை ஆய்வாளா் அனில் குமாா் விஷ்னோய் கூறுகையில், ‘ஜவாா் மைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓதா பாலம் அருகே உதய்ப்பூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சுரங்கங்களில் பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் வெடிபொருளைப் பயன்படுத்தியுள்ளனா். இதனால், தண்டவாளம் உடைந்து சேதமடைந்தது. குண்டுவெடிப்பு ஓசை கேட்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து தடயங்களைச் சேகரித்தனா். தண்டவாளத்தை உடைத்து ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தில் இந்தக் குண்டுவெடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. நாசவேலையில் ஈடுபட்டவா்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது.

குண்டுவெடிப்பை அடுத்து அகமதாபாத்- உதய்ப்பூா் ரயில் உள்பட அப்பாதையில் செல்லும் அனைத்து ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் ரயில் விபத்து தவிா்க்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டது’ என்றாா்.

ADVERTISEMENT

அகமதாபாத்-உதய்ப்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஐஏ விசாரணை: இந்தக் குண்டுவெடிப்பு தொடா்பாக என்ஐஏ உள்ளிட்ட இதர புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவாா்கள் என்றும் அமைச்சா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT