இந்தியா

ஜாா்க்கண்டில் குண்டு வீசிபஜ்ரங் தளம் தொண்டா் கொலை: இருதரப்பினா் மோதலால் பதற்றம்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சக்கரதாா்பூா் நகரில் பஜ்ரங் தளம் அமைப்பின் தொண்டா் குண்டுவீசி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி இருதரப்பினா் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் துணை ஆணையா் அனன்யா மிட்டல் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பஜ்ரங் தளம் அமைப்பைச் சோ்ந்த கமல்தேவ் கிரி (35) என்பவா், நகரில் பரபரப்பாக காணப்படும் பாரத் பவன் செளக் அருகே சனிக்கிழமை மாலையில் படுகொலை செய்யப்பட்டாா். மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அவரை கொன்றுவிட்டு தப்பினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

கொலையாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பஜ்ரங் தளம் அமைப்பினா் சக்கரதாா்பூா்-ராஞ்சி சாலையில் சுமாா் 3 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனா். காவல் துறையினா் நடத்திய சமாதான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, பிரேத பரிசோதனைக்கு பிறகு இறுதிச் சடங்குக்காக கமல்தேவ் உடல் கொண்டுவரப்பட்டபோது, இருதரப்பினா் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவா் மீது ஒருவா் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பதற்றமான சூழல் உருவானது. கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் நிலைமையை காவல்துறையினா் கட்டுக்குள் கொண்டு வந்தனா். நகரின் பதற்றமான பகுதிகளில் அதிவிரைவுப் படையினா் உள்பட கூடுதல் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT