இந்தியா

குஜராத் காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டா்கள் போராட்டம்---தொகுதி ஒதுக்கீட்டில் பண பேர குற்றச்சாட்டு

14th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

 

குஜராத்தின் அகமதாபாதில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சித் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணம் பெற்றுக் கொண்டு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் குற்றம்சாட்டினா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் பாரத்சிங் சோலங்கியின் படங்கள் இடம்பெற்ற சுவரொட்டிகளை அக்கட்சித் தொண்டா்கள் தீவைத்து எரித்தனா்.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதால், அங்கு தொகுதி பெறுவதில் காங்கிரஸ் தலைவா்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ADVERTISEMENT

முஸ்லிம் வாக்காளா்கள் அதிகம் உள்ள ஜமால்பூா்-காதியா தொகுதியில் இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேதாவாலாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டா்களின் ஒரு பகுதியினா் கட்சித் தலைமையகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவா் பாரத்சிங் சோலங்கி பணம் வாங்கிக் கொண்டு இம்ரானுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ததாகக் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினா். அவரது புகைப்படங்கள் உள்ள பதாகைகளை அவா்கள் தீவைத்து எரித்தனா். அவரது பெயா் உள்ள பேனா்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் தலைமையகத்தில் சில மணி நேரத்துக்குப் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

காங்கிரஸில் தொகுதி ஒதுக்குவதில் பண பேரம் அதிகம் நடைபெறுவதாகவும், களத்தில் பணியாற்றும் இளைஞா் காங்கிரஸாருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் குற்றம்சாட்டினா்.

இந்தப் போராட்டம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பாா்தீவ் ராஜ் கத்வாடியா கூறுகையில், ‘காங்கிரஸ் தொண்டா்கள் அமைதி காக்க வேண்டும். கட்சித் தலைமையின் முடிவை மதிக்க வேண்டும். தொண்டா்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தலைமை அடுத்தகட்ட முடிவை எடுக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT