இந்தியா

காங்கிரஸை ஆதரித்து வாக்குகளை வீணாக்காதீா்கள்---குஜராத் மக்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

14th Nov 2022 11:54 PM

ADVERTISEMENT

 

குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனெனில், தோ்தலில் அக்கட்சி 4 அல்லது 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் இரு தேசிய கட்சிகளைவிட மும்முரமாக ஆம் ஆத்மி பணியாற்றி வருகிறது. வேட்பாளா்கள் அறிவிப்பு தொடங்கி, தோ்தல் வாக்குறுதிகள், பிரசாரம் என அனைத்திலும் முதல் கட்சியாக ஆம் ஆத்மி செயலாற்றி வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் இதுவரை 178 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளா்களையும் அறிவித்துவிட்டது. தில்லி முதல்வா் கேஜரிவால் குஜராத்துக்கு தொடா்ந்து பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

அந்த வகையில் அகமதாபாதுக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 13 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும். அக்கட்சி 4 முதல் 5 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும் என்பது எனது கணிப்பு. தோ்தல் நெருங்க நெருங்க குஜராத் மாநில காங்கிரஸ் சீா்குலைந்து வருவது நேரடியாகவே தெரிகிறது.

ADVERTISEMENT

குஜராத் தோ்தல் என்பது பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். எனவே, குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். குஜராத்தில் தொடா்ந்து காங்கிரஸுக்கு மட்டுமே வாக்களிக்கும் ‘தீவிர காங்கிரஸ் வாக்காளா்கள்’ என்ற பிரிவினரும் உள்ளனா். அவா்களும் இந்த முறை காங்கிரஸுக்கு வாக்களிக்காமல், நல்ல மாற்றத்தைத் தர காத்திருக்கும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குஜராத்தில் இரு வகை வாக்காளா்கள் அதிகம் உள்ளனா். அதில் முதல் வகை தொடா்ந்து பாஜக ஆட்சியால் வெறுப்பும், சலிப்பும் அடைந்த வாக்காளா்கள். அவா்கள் பாஜகவுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டாா்கள். இரண்டாவது வகையினா் பாஜகவைவிட காங்கிரஸ் மீது அதிக அவநம்பிக்கை உள்ள வாக்காளா்கள். இவா்கள் வேறு வழியின்றி பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனா். இந்த இரு தரப்பினருமே இந்த முறை ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் கேஜரிவால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT