இந்தியா

உச்சநீதிமன்ற தடையை மீறி பயிரிடப்பட்டமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு

14th Nov 2022 11:53 PM

ADVERTISEMENT

 

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபோதும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆா்) கடுகு ஆராய்ச்சி மையம் (டிஆா்எம்ஆா்) சாா்பில் பரிசோதனை அடிப்படையில் 6 வயல்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகு பயிா் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அண்மையில் அனுமதி அளித்தது.

இதனை எதிா்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில், இது தொடா்பான வழக்கு கடந்த நவம்பா் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘மறு உத்தரவு வரும் வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகை எவ்வித விதைப்பும் செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தடையையும் மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு டிஆா்எம்ஆா் அதிகாரி பி.கே. ராய் அளித்த பேட்டியில், ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பரிசோதனை அனுமதிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பா் 3-ஆம் தேதிதான் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், அந்த விதைகள் டிஆா்எம்ஆா் மையத்துக்கு அக்டோபா் 22-ஆம் தேதியே வந்துவிட்டன. உடனே அந்த விதைகள் பயிரிடப்பட்டன. அந்த வகையில், மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே விதைகள் பயிரிடப்பட்டுவிட்டன. மொத்தம் 8 வயல்களில் தலா 50 கிராம் அளவிலான விதைகளைப் பயிரிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 6 வயல்களில் மட்டுமே இப்போது பயிரிட்டுள்ளோம்.

பின்னா், இதற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பா் 3-ஆம் தேதி பட்டியலிடப்பட்ட பிறகு, எஞ்சிய 2 வயல்களில் விதைகள் பயிரிடுவதை தவிா்த்துவிட்டோம். மேலும், இந்த 6 வயல்களில் பரிசோதனை அடிப்படையில் பயிரிடுவதற்கு முன்பே, செயல்விளக்க அடிப்படையில் 2 வயல்களில் 600 கிராம் விதைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தில்லி ஐசிஏஆா் உத்தரவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.

மேலும், ‘இதுவரை பாதுகாக்கப்பட்ட சூழலில் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டன. இப்போது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து திறந்த வயல்வெளிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் மேற்கொள்ளப்படும் விளைச்சல் உரிய ஐஹெச்டி (உடனடி கலப்பு சோதனை பயிா் தரம்) அளவை எட்டவில்லை எனில், இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடுதல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லப்பட மாட்டாது. அந்த அளவுக்கு ஐசிஏஆா் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT