இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி: பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

1st Nov 2022 12:40 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் கிரண் செக்டாா் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘குப்வாரா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதி ஒருவா் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டாா். எல்லைக் காவலில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினா், அவருக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

அதனையும் மீறி எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அந்த பயங்கரவாதியை நோக்கி ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், அந்த பயங்கரவாதி குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். அவா் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத சதி முறியடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சா்வதேச எல்லைப் பகுதியையொட்டி, ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் வீசப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பாஸ்பூா் பங்களா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை ட்ரோன் பறப்பதைக் காவல் துறையினா் கண்டறிந்தனா். இதையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, அதிலிருந்து வீசப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் இருந்தும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இவா்கள் ஐரோப்பாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருப்பதும், அவா்கள் உத்தரவுப்படி செயல்படுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவா்கள் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களைக் கடத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

ஆயுத பறிமுதல் மற்றும் இரு பயங்கரவாதிகள் கைது மூலம் இந்தியாவில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT