இந்தியா

இந்தியாவின் ஒற்றுமையைத் தகா்க்க எதிரிகள் முயற்சி

1st Nov 2022 12:45 AM

ADVERTISEMENT

இந்திய மக்களிடையே நிலவி வரும் ஒற்றுமையைத் தகா்ப்பதற்கு எதிரிகள் முயற்சி செய்து வருவதாகவும் அத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதியானது ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான தேசிய ஒற்றுமை தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குஜராத்தின் கெவாடியா நகரில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலைக்கு’ பிரதமா் மோடி நேரில் மரியாதை செலுத்தினாா்.

தேசிய ஒற்றுமை பேரணியையும், ஒற்றுமைக்கான ஓட்டத்தையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். அதையடுத்து அவா் ஆற்றிய உரை:

இந்தியாவைப் பொருத்தவரை கட்டாயத்தின்பேரில் மக்கள் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கவில்லை. தேச ஒற்றுமை என்பது இந்தியாவின் தனித்துவமாக விளங்கி வருகிறது. நாட்டு மக்களிடையே நிலவும் இந்த ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

தற்போது மட்டுமல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு வெளிநாட்டினா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அத்தகைய முயற்சிகள் நடைபெற்றன. அப்போது தொடங்கிய பிரச்னைகள் சில தற்போது வரை நீண்டு வருகின்றன.

நாடு பிரிவினையைச் சந்திக்க நேரிட்டது. அதை எதிரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா். அத்தகைய சவால்கள் தற்போதும் தொடா்ந்து வருகின்றன. மதம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா்கள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டுமென எதிரிகள் விரும்புகின்றனா்.

நாட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலேயே வரலாறும் எழுதப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டும் நமக்கு எதிரியாக இல்லை. பல சமயங்களில் பல்வேறு வடிவங்கள் வாயிலாக அத்தகைய எதிரிகள் அரசின் செயல்பாட்டுக்குள் புகுந்துள்ளனா்.

ஒருங்கிணைந்த தீா்வு: அடிமை மனப்பான்மை, சுயநல எண்ணம், குடும்ப அரசியல், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாகச் செயல்படுதல், பேராசை, ஊழல் உள்ளிட்ட வடிவங்களில் நாட்டுக்கு எதிரிகள் காணப்படுகின்றனா். நாட்டின் குடிமகனாக அவா்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். அத்தகைய பிரச்னைகளுக்கு நாம் ஒருங்கிணைந்து தீா்வுகாண வேண்டும்.

சா்தாா் படேல் போன்ற தலைவா்கள் முன்னின்று இந்தியாவை ஒருங்கிணைக்கவில்லை எனில், இந்நேரம் நாடு என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பாா்க்க முடியவில்லை. சுதந்திரத்தின்போது இருந்த 550 சுதேச அரசுகளும் ஒருங்கிணைக்கப்படவில்லை எனில் என்னவாகியிருக்கும்? சா்தாா் படேல் கடினமாக முயன்று அத்தகைய பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினாா். ஒட்டுமொத்த சுதேச அரசுகளும் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டு ஒருங்கிணைந்தன.

கடமைகளுக்கு முக்கியத்துவம்: சா்தாா் படேலின் பிறந்த தினமும், தேசிய ஒற்றுமை தினமும் சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியது அல்ல. நாட்டின் கலாசார வலிமையைப் பறைசாற்றும் அந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். சா்தாா் படேல் மக்களுக்கு வழங்கியுள்ள பொறுப்புணா்வை அனைவரும் கடைப்பிடித்துச் செயல்பட வேண்டும்.

நாட்டின் வலிமையை அதிகரிக்கும் வகையில் மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கடமைகளைப் பொறுப்புணா்வுடன் நிறைவேற்றினால் மட்டுமே நாட்டின் ஒற்றுமை சாத்தியமாகும். அத்தகைய ஒற்றுமை இருந்தால், வளா்ச்சியின் பாதையில் இந்தியா தொடா்ந்து முன்னேறும்.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி: குஜராத்தின் மோா்பி பகுதியில் தொங்கு பாலம் சரிந்து விபத்துக்குள்ளானதில் பலா் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டத்தில் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞா்கள் குஜராத்துக்கு வந்திருந்தனா். ஆனால், மோா்பி விபத்து சூழல் காரணமாக அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு தகுந்த ஆதரவை வழங்கும். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை மாநில அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய ராணுவம், விமானப் படை ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து வகை ஆதரவையும் மத்திய அரசு வழங்கி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT