இந்தியா

நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜக

31st May 2022 03:09 PM

ADVERTISEMENT

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்காததால், நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் இஸ்லாமிய உறுப்பினர்களே இல்லாத நிலை ஏற்படவுள்ளது.

15 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினா்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

மாநிலங்களவையில் பாஜக சார்பில் தற்போது 3 இஸ்லாமிய உறுப்பினர்கள் உள்ளனர். இதில்,  மத்திய சிறுபாண்மை விவகாரத் துறை அமைச்சராகவுள்ள முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் ஜூலை 7ஆம் தேதியுடனும், சையத் ஜாபர் இஸ்லாம் பதவிக்காலம் ஜூலை 24 மற்றும் எம்.ஜே. அக்பர் பதவிக்காலம் ஜூன் 29 தேதியுடன் நிறைவுபெறவுள்ளது.

இதையும் படிக்க | அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய படமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ் உறுதி

ADVERTISEMENT

மக்களவையில் பாஜக சார்பில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 22 வேட்பாளர்கள் பட்டியலில் இவர்கள் மூன்று பேரின் பெயரும் இடம்பெறவில்லை. இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகின்றது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுவதாவது, ‘மாநிலங்களையில் மூன்று முறைக்கு மேல் எந்த தலைவருக்கும் வாய்ப்பளிக்கக் கூடாது என்று பாஜக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனடிப்படையில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ள முக்தாருக்கு இம்முறை மாநிலங்களவை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காலியாகவுள்ள ராம்பூர் மக்களவை தொகுதிக்கு ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் முக்தார் போட்டியிடலாம் அல்லது ஆளுநர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இடைத் தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றிபெறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு இஸ்லாமிய உறுப்பினர் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது.

உத்தரப் பிரதேசத்திலிருந்து மக்களவைக்கு 1998ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்தார், முதல்முறையாக வாஜபேயி அமைச்சரவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப விவகார அமைச்சராக பொறுப்பேற்றார். பின், மோடி அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT