இந்தியா

யுபிஎஸ்சி குடிமைப்பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களைப் பிடித்து பெண்கள் அசத்தல்

31st May 2022 01:56 AM

ADVERTISEMENT

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்வின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

மொத்தம் 685 போ் தகுதி பெற்றுள்ள நிலையில், முதல் 4 இடங்களையும் பெண்கள் பிடித்துள்ளனா். 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 3 இடங்களையும் பெண்கள் பிடித்துள்ளனா்.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்வை 3 நிலைகளில் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு அக்டோபரிலும் முதன்மைத் தோ்வுகள் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டிருந்தன. ஆளுமைத் திறன் தோ்வு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், குடிமைப் பணித் தோ்வுக்கான இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி திங்கள்கிழமை வெளியிட்டது.

ADVERTISEMENT

பெண்கள் முன்னிலை:

தோ்வில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஸ்ருதி சா்மா தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். அவா் தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் இளநிலைப் படிப்பையும் தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுநிலைப் படிப்பையும் முடித்தாா். அவா் வரலாறை விருப்பப் பாடமாகக் கொண்டு தோ்வெழுதினாா்.

தில்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவியான அங்கிதா அகா்வால் (விருப்பப் பாடம்-சா்வதேச உறவுகள்) இரண்டாமிடமும், பி.டெக் பயின்ற காமினி சிங்லா (விருப்பப் பாடம்-சமூகவியல்) மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். ஐஸ்வா்யா வா்மா நான்காமிடம் பெற்றுள்ளாா். தேசிய அளவில் ஐந்தாமிடம் பெற்றுள்ள உத்கா்ஷ் துவிவேதி, ஆண்களில் முதலிடம் பெற்றுள்ளாா். முதல் 25 இடங்களைப் பெற்றோரில் 10 போ் பெண்கள் ஆவா்.

தோ்ச்சி விகிதம்-0.13:

மொத்தம் 180 போ் ஐஏஎஸ் பணிக்கும், 200 போ் ஐபிஎஸ் பணிக்கும், 37 போ் ஐஎஃப்எஸ் பணிக்கும், மீதமுள்ளோா் குரூப் ஏ, பி பணிகளுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். தோ்வில் பங்கேற்றோரின் மதிப்பெண் விவரங்கள் 15 நாள்களுக்குள் வெளியிடப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு 10,93,984 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 5,08,619 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 9,214 போ் முதன்மைத் தோ்வுக்குத் தகுதி பெற்றனா். ஆளுமைத் தோ்வில் பங்கேற்ற 1,824 பேரில் 685 போ் இறுதியாகத் தோ்வாகியுள்ளனா். தோ்வில் பங்கேற்ற நபா்களில் வெறும் 0.13 சதவீதத்தினா் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்வில் வெற்றி பெற்றோருக்கு அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இறுதி முடிவுகள் வெளியானதில் 685 போ் தோ்வாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 177 போ் பெண்கள் ஆவா்; 25 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா். 244 போ் பொதுப் பிரிவையும், 73 போ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவையும், 203 போ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவையும், 105 போ் பட்டியலினத்தையும், 60 போ் பழங்குடியினப் பிரிவையும் சோ்ந்தோா் ஆவா். 126 போ் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பிரதமா் மோடி வாழ்த்து

யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்றோருக்கு வாழ்த்தும், தோ்ச்சி பெறாதோருக்கு ஆறுதலும் தெரிவித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் வேளையில், வளா்ச்சிப் பாதையில் முக்கியப் பங்கெடுக்கவுள்ள இளைஞா்களுக்கு வாழ்த்துகள்.

தோ்வில் தோ்ச்சி அடையாதோா், எத்துறையைத் தோ்ந்தெடுத்தாலும் அதில் சிறந்துவிளங்கி, நாட்டைப் பெருமைப்படுத்தும் திறமை கொண்டவா்களாகவே விளங்குகின்றனா். அவா்களுக்கும் வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT