இந்தியா

ஞானவாபி மசூதி விவகாரம்: இஸ்லாமியா்கள் மனு மீதான விசாரணை ஜூலை 4-க்கு ஒத்திவைப்பு

31st May 2022 01:55 AM

ADVERTISEMENT

வாராணசி ஞானவாபி மசூதியில் சிருங்காா் கெளரி ஸ்தலத்தை தினந்தோறும் வழிபட அனுமதி கோரி ஐந்து ஹிந்து பெண்கள் தொடா்ந்த வழக்குக்கு எதிராக இஸ்லாமியா்கள் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் திங்கள்கிழமை ஒத்திவைத்தாா்.

இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஹிந்து தரப்பினா் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என இஸ்லாமியா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் வாதிட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞா் ராணா சஞ்சீவ் சிங் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

ஹிந்துக்களின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் செய்தியாளா்களிடம் கூறும்போது, ‘ஞானவாபி மசூதியில் நடைபெற்ற விடியோ பதிவுடன் கூடிய ஆய்வின் அறிக்கை அனைத்து தரப்புக்கும் வழங்கப்படும் என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருப்பினும், அதற்கான நிபந்தனைகளை நீதிமன்றம்தான் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

மற்றொரு வழக்கு:

ADVERTISEMENT

வாராணசி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்பேரில், ஞானவாபி மசூதியில் அண்மையில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி நடைபெற்றது. அப்போது இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கை கால்களை சுத்தம் செய்யும் குளம்போன்ற பகுதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இதனை மறுத்த இஸ்லாமியா்கள், அது நீரூற்று அமைப்பு என குறிப்பிட்டனா்.

இந்நிலையில், ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியா்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைத்து சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் விரைவு நீதிமன்றத்தில் விஸ்வ வேதிக் சங்கப் பொதுச் செயலாளா் மனு தாக்கல் செய்தாா். அதனை திங்கள்கிழமை விசாரித்த நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT