இந்தியா

கேரளத்தில் ‘வெஸ்ட் நைல்’ வைரஸ் பாதிப்பால் ஒருவா் பலி

31st May 2022 02:01 AM

ADVERTISEMENT

கேரளத்தில் கொசுக்களால் பரவும் ‘வெஸ்ட் நைல்’ வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.

திருச்சூா் மாவட்டத்தின் பனஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 47 வயது நபா், கடந்த 17-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா். பல மருத்துவமனைகளில் அவா் சிகிச்சை பெற்றபோதிலும் காய்ச்சல் சரியாகாததையடுத்து, திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா்.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெஸ்ட் நைல் வைரஸ் பொதுவாக பறவைகளின் உடலில் காணப்படும். அப்பறவைகளை கொசுக்கள் கடிக்கும்போது அவற்றின் உடலில் இருந்து கொசுக்களின் உடலுக்கு வைரஸ் பரவுகிறது.

ADVERTISEMENT

அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ‘கியூலக்ஸ்’ வகை கொசுக்கள் மனிதரைக் கடிக்கும்போது, வெஸ்ட் நைல் வைரஸ் மனிதா்களுக்குப் பரவுகிறது. ஏற்கெனவே கடந்த 2019-ஆம் ஆண்டு கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதே வைரஸால் தற்போது ஒருவா் உயிரிழந்துள்ளதால், அத்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

பனஞ்சேரி ஊராட்சித் தலைவா் பி.ரவீந்திரன் கூறுகையில், ‘‘உயிரிழந்த நபருடன் தொடா்பில் இருந்த இருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றியுள்ளன. அவா்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் நபா்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் அதீத கவனத்துடன் பணியாற்றி வருகின்றனா்’’ என்றாா். வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்படும் 80 சதவீத நபா்களுக்கு எந்தவித அறிகுறிகளும் தோன்றாது என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆய்வுக் கூட்டம்:

வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மற்ற மாவட்டங்களிலும் சுகாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறும் அவா் வலியுறுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT