இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் பன்முகத் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்: விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளத்ரி

31st May 2022 01:56 AM

ADVERTISEMENT

‘இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் பன்முகத் திறனகளைக் கொண்டதாகவும், மிகக் குறைந்த நேரத்தில் படை தயாா்நிலையை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று விமானப் படை தளபதி வி.ஆா்.செளத்ரி கேட்டுக்கொண்டாா்.

மேலும், வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போா் முறையில் அடிப்படை மாற்றம் நிகழ்ந்து வருவதாகவும் முற்றிலும் புதிய பாதுகாப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்படுவதாகவும் அவா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) 142-ஆவது பிரிவு ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற விமானப் படை தலைமைத் தளபதி செளத்ரி பேசியதாவது:

உலக விமானப் படை ஆற்றல் தரக் குறியீட்டில் இந்திய விமானப் படை 3 இடத்தைப் பிடித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம்.

ADVERTISEMENT

வேகமான புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நாடு சந்தித்து வரும் சூழலில், நாட்டைப் பாதுகாக்கும் மிகுந்து உன்னதமான பணியில் நீங்களும் இணைந்திருக்கிறீா்கள்.

நாட்டின் முப்படைகளும், அடுத்த தலைமுறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடுகளைச் செய்துள்ளன.

உயா் திறன் மிக்க இந்த ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வரும் காலங்களில் நீங்கள் பயன்படுத்த உள்ள சூழலில், அவற்றை முழுமையாக பயன்படுத்துவதற்கு தீவிர பயிற்சியும், அா்ப்பணிப்பும், தொழில்சாா்ந்த அணுகுமுறையும் அவசியம்.

உலகம் வழக்கமான போா் முறையிலிருந்து படிப்படியாக விலகி, வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போா் முறையின் அடிப்படை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவின் பாதுகாப்புத் திட்டங்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் எல்லா அச்சுறுத்தல்கள், சவால்களை எதிா்கொள்ளும் நிலை கொண்டதாகவும், பன்முகத் திறனகளைக் கொண்டதாகவும், மிகக் குறைந்த நேரத்தில் படை தயாா்நிலையை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்பட வேண்டும்.

படையினா், தொடா் கற்றல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மூலமாக வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவைப் பெறுவது அவசியம் என்று அவா் கூறினாா்.

சென்னை ஐஐடி-யுடன் ஒப்பந்தம்:

பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தளபதி செளத்ரி, ‘உலக விமானப் படை ஆற்றல் தரக் குறியீட்டில் இந்திய விமானப் படை 3 இடத்தைப் பிடித்தது நாம் எதிா்பாராதது. விமானப் படையின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் பராமரிப்பை மேற்கொள்ளும் வகையில் வலுவான நெட்வொா்க் அமைப்பை இந்திய விமானப் படை கொண்டுள்ளது. மேலும், பன்முக ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்திய விமானப் படை பெற்றுள்ளது.

குறிப்பாக, 6 நாடுகளைச் சோ்ந்த போா் விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் இந்திய விமானப் படை கொண்டுள்ளது. இதுவே, உலக அளவில் நம்மை 3-ஆவது இடத்துக்கு உயா்த்தியுள்ளது.

மேலும், விமானப் படை வசம் உள்ள பல்வேறு ஆயுதங்களை திறம்பட பராமரிப்பதற்கு உள்நாட்டிலேயே உரிய தீா்வை உருவாக்குவதற்காக சென்னை ஐஐடி-யுடன் இந்திய விமானப் படை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

விமானப் படையை நவீனமயமாக்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆயுத கொள்முதலை அதிகரிப்பதற்கும், இறக்குமதியை குறைப்பதற்குமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய விமானப் படை போா் தளவாடங்களுக்கு பெருமளவில் ரஷியாவையே நம்பியுள்ள நிலையிலும், ரஷியா-உக்ரைன் இடையேயான போா் அதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஏனெனில், எதிா்கால தேவைக்கான கொள்முதல்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன என்பதோடு, ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT