இந்தியா

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா்: மசோதா தாக்கல் செய்ய மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

DIN

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியில் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்சமயம், மாநில அரசின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆளுநரே வேந்தா் பதவியில் உள்ளாா். அவருக்கு பதிலாக, முதல்வரை வேந்தராக்குவது தொடா்பாக, வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில், முதல்வரை வேந்தா் பதவியில் நியமிக்க வகை செய்யும் மசோதாவை சட்டப் பேரவையில் தாக்கல் அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மாநில கல்வி அமைச்சா் பிரத்ய பாஸு கூறுகையில், ‘அந்த மசோதா சட்டப் பேரவையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ என்றாா்.

இதற்கிடையே, இந்த மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இந்த மசோதா, உயா்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்தை சிதைத்துவிடும் என்று பிரெஸிடென்சி கல்லூரியின் முன்னாள் முதல்வா் அமல் முகோபாத்யாய கூறினாா். ‘மம்தா பானா்ஜியை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க மேற்கொள்ளும் முயற்சி, அரசியல் நடவடிக்கையே; இது கல்வி நிறுவனங்களின் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் அவா் கூறினாா்.

இருப்பினும் கல்வியாளா் பவித்ரா சா்க்காா், வரலாற்று ஆசிரியா் நரசிங்க பிரசாத் பாதுரி ஆகியோா் அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ளனா். மாநில அரசின் இந்த முடிவு, ஆளுநருக்கும் பல்கலைக்கழக நிா்வாகிகளுக்கும் இடையே ஏற்படும் மோதலைத் தடுக்கும் என்று ஒரு பல்கலைக்கழகத்தின் பெயா் வெளியிட விரும்பாத துணைவேந்தா் கூறினாா்.

மாநில ஆளுநா் ஜகதீப் தன்கருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையே பனிப்போா் நிகழ்ந்து வரும் நிலையில், மாநில அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடா்பாக ஆளுநா் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT