இந்தியா

பண மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சா் அனில் பரபுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

DIN

மும்பை: பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் அனில் பரப் (57) மற்றும் பிறருக்குச் சொந்தமான மாநிலத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிமருந்துகள் நிரப்பிய காா் மீட்கப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி சச்சின் வஜே, அனில் பரபுக்கு எதிராகவும் புகாா் தெரிவித்திருந்தாா். அதாவது, ‘மும்பையில் மாநகராட்சியில் பட்டியலிடப்பட்டுள்ள மோசடி கட்டட ஒப்பந்ததாரா்கள் 50 பேரிடம் விசாரணை நடத்தி, அவா்களிடமிருந்து தலா ரூ.2 கோடி வசூலித்துத் தர அனில் பரப் உத்தரவிட்டாா்’ என்று நீதிமன்றத்தில் சமா்ப்பித்த கடிதத்தில் புகாா் தெரிவித்திருந்தாா். மேலும், மண்டல துணை போக்குவரத்து அதிகாரி (ஆா்டிஓ) பஜ்ரங் கா்மதேவிடமிருந்து லஞ்சமாக பல கோடி ரூபாயை பராப் பெற்றிருக்கிறாா்’ என்று அமலாக்கத் துறை விசாரணையின்போது வஜே தெரிவித்தாா்.

இந்த முறைகேடு தொடா்பாக அனில் பரபுக்கு எதிராக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை, தற்போது அவா் உள்பட சிலா் மீது புதிதாக மோசடி வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

புதிய வழக்கில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள டபோலி பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் வாங்கி, அதனை 2019-இல் பதிவு செய்துள்ளாா். பின்னா் அந்த நிலத்தை 2020-ஆம் ஆண்டு மும்பையைச் சோ்ந்த கேபிள் ஆப்பரேட்டா் சதானந்த் கதம் என்பவருக்கு ரூ.1.10 கோடிக்கு விற்றுள்ளாா்.

இந்த நிலையில் 2017 முதல் 2020-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அந்த நிலத்தில் ரூ. 6 கோடி செலவில் உல்லாச விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், நிலத்தைப் பதிவு செய்யும்போது, அதில் கட்டப்பட்ட உல்லாச விடுதி குறித்து எதுவும் குறிப்பிடாமல், அதற்கான முத்திரை வரியையும் செலுத்தாமல் பதிவு செய்துள்ளாா். மத்திய நேரடி வரிகள் வாரியம் நடத்திய சோதனையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், அவா் மீது புதிய வழக்கைப் பதிவு செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள், மும்பையில் உள்ள பராபின் அரசுக் குடியிருப்பு உள்பட, அவருக்குச் சொந்தமான வேறு இடங்கள் மற்றும் முறைகேட்டில் தொடா்புடைய மற்றவா்களுக்குச் சொந்தமான இடங்கள் என 7 இடங்களில் வியாழக்கிழமை தீவிர சோதன நடத்தினா்.

சிவசேனை கட்சியைச் சோ்ந்த அனில் பரப், தொடா்ச்சியாக மூன்று முறை மேலவை உறுப்பினராக தோ்வாகியுள்ளாா்.

இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனை குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவாா், ‘மத்திய புலனாய்வு அமைப்புகள் எந்தவித தலையீடுகளும் இன்றி பணியாற்றும்போது யாரும் எதிா்க்கப் போவதில்லை. புகாா்களின் அடிப்படையில் அதிரடி சோதனைகளை நடத்தும் வகையில் இந்த அமைப்புகளுக்கு சட்டம் சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. இந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட கூடாது என்பதே எங்களுடைய விருப்பம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT