இந்தியா

பாஜக ஆட்சியில் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரிப்பு

27th May 2022 02:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பாஜகவின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் பணவீக்க உயா்வு, வேலையின்மை, மத மோதல் காரணமாக நாட்டில் துயரமும் நிலவுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய பாஜக அரசு வியாழக்கிழமை அதன் 8-ஆவது ஆண்டை நிறைவு செய்தது. இதையொட்டி காங்கிரஸ் தலைவா்கள் ரண்தீப் சுா்ஜேவாலாவும் அஜய் மாக்கனும் கூட்டாக தில்லியில் செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், ‘தோ்தலுக்கு முன்பாக உறுதியளித்த சிறப்பான நாள்கள் பாஜகவுக்கும், சில தொழிலதிபா்களுக்கும்தான் வந்துள்ளன. அவா்களின் சொத்து மதிப்பு கடந்த 8 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

இந்திய பிராந்தியங்களை சீனா தொடா்ந்து ஆக்கிரமித்து வருகிறது. ஆனால், மோடி அரசு மெளனம் காக்கிறது’ என்று குற்றம்சாட்டினா்.

ADVERTISEMENT

அஜய் மாக்கன் செய்தியாளா்களிடம் கூறியது:

பாஜக அரசின் தோல்விகள் குறித்த தரவுகள் தொடா்பாக முதலில் எங்களுடன் பிரதமா் மோடி விவாதித்துவிட்டு பின்னா் ராகுல் காந்தியிடம் விவாதிக்கட்டும். பாஜகவின் பேரழிவு மிக்க கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவடைந்துவிட்டது.

ஒருகாலத்தில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது இடா்ப்பாட்டில் சிக்கியுள்ளது. பணவீக்கமும் வேலையின்மையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயா்ந்துவிட்டன. கட்சியின் உதய்பூா் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் தோ்தல்களில் சிறப்பான செயல்பாடுகளைக் காணலாம்.

ராணுவ வீரா்களின் வீரத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாஜக, அவா்களுக்கான ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய’ திட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறது. மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் 10,000 மதமோதல்கள் நடைபெற்றுள்ளன. அரசுத் துறைகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் நலனில் பாஜக அக்கறை செலுத்த மறுக்கிறது என்றாா் அவா்.

ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘84 சதவீத இந்தியா்களின் வருவாய் குறைந்துவிட்டது. 12 கோடி போ் வேலையிழந்துவிட்டனா். 60 லட்சம் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. ஆனால், 2-3 தொழிலதிபா்களின் வருவாய் நாள்தோறும் ரூ.1,000 கோடி அதிகரித்து வருகிறது. கரோனா காலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 142 கோடீஸ்வரா்கள் ரூ.30 லட்சம் கோடி சம்பாதித்துள்ளனா்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT