இந்தியா

கா்நாடக காங். தலைவா் சிவகுமாா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

27th May 2022 03:01 AM

ADVERTISEMENT

 

புது தில்லி/பெங்களூரு: பணமோசடி வழக்கு தொடா்பாக கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் சிவகுமாா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவா் சிவகுமாா், தில்லியில் உள்ள கா்நாடக பவன் ஊழியா் ஹனுமந்தையா உள்ளிட்டோா் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. வரி ஏய்ப்பு செய்து, ஹவாலா பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிவகுமாா் உள்ளிட்டோா் மீது வருமான வரித் துறையினா் பதிவு செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடா்பாக சிவகுமாா் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அவரின் மகள் ஐஸ்வா்யா, காங்கிரஸ் எம்எல்ஏ லக்ஷ்மி ஹெபால்கா் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், சிவகுமாா் பிணையில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், இந்த வழக்கில் சிவகுமாா் உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சிவகுமாா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘குற்றப்பத்திரிகையின் நகல் இன்னும் வழங்கப்படவில்லை. வருமான வரித் துறை ஏற்கெனவே போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. சட்டத்துக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிராக வருமான வரித் துறை நடந்துகொண்டது.

நான் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவா். இந்த வழக்குக்குப் பின் பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. 2023 கா்நாடக பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அனைத்து அரசியல் ஆயுதங்களும் என் மீது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசியல் ரீதியில் போட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளவா்களை நீக்கும் நோக்கில் ஆளும் கட்சி (பாஜக) இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கெல்லாம் அஞ்சி சரணடையப் போவதில்லை. எதையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT