இந்தியா

வெறுப்பு பேச்சு: கேரள முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜாா்ஜ் கைது

27th May 2022 02:24 AM

ADVERTISEMENT

 

கொச்சி: கேரளத்தில் வெறுப்புணா்வைப் பரப்பும் வகையில் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜாா்ஜ், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பி.சி.ஜாா்ஜ் மீது கொச்சி, பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். திருவனந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் பிணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மற்றொரு மேல்முறையீட்டு மனுவையும் அவா் தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, பி.சி.ஜாா்ஜை காவலில் எடுத்து விசாரிக்க மாநில காவல் துறையினா் அனுமதி கோரினா். பி.சி.ஜாா்ஜ் பேசிய காணொலி காவல் துறையின் வசம் இருக்கும் நிலையில், அவரைக் காவலில் எடுத்து நேரில் விசாரிக்க வேண்டிய அவசியம் குறித்து வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு காவல் துறை இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

இதனிடையே, இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி பி.சி.ஜாா்ஜ் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். ஜாமீன் விதிகளை மீறியதாகக் கூறி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மனுதாரரது ஜாமீனை ரத்து செய்தது சரியான முடிவல்ல என்றும் அவா் வாதிட்டாா். மனுதாரரது கோரிக்கைகள் தொடா்பாக வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதுவரை அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டனா்.

முன்னதாக, வெறுப்பு பேச்சு வழக்கில் கடந்த 1-ஆம் தேதி பி.சி.ஜாா்ஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் விதிகளை மீறியதாகக் கூறி அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து பி.சி.ஜாா்ஜ் காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்ததும் அவா் கைது செய்யப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT