இந்தியா

காா்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை

27th May 2022 02:38 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: விதிகளை மீறி சீனா்களுக்கு விசா பெற்றுத் தந்த ஊழல் புகாா் தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறப்பு நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பிரிட்டனிலிருந்து புதன்கிழமை திரும்பிய காா்த்தி சிதம்பரம், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆஜரானாா்.

கடந்த 2011-இல் பஞ்சாபில் உள்ள தல்வண்டி சாபோ எரிசக்தித் திட்டத்தை நிறுவும் ஒப்பந்தம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தை முடிப்பதற்கான அவகாசம் கடந்ததால், சட்ட நடவடிக்கைகளைத் தவிா்க்கும் நோக்கில் கூடுதல் பணியாளா்களை அழைத்து வந்து பணியை விரைந்து முடிக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இந்தியாவின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனத்தால் கூடுதலாகப் பணியாளா்களை அழைத்துவர முடியவில்லை.

ADVERTISEMENT

அதையடுத்து, அந்த நிறுவனம் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்தை அணுகியது. விதிமுறைகளை மீறி 263 சீனப் பணியாளா்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக காா்த்தியிடம் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, காா்த்தி சிதம்பரம், அவரின் ஆடிட்டரும் தல்வண்டி நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டவருமான எஸ்.பாஸ்கர ராமன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பான சில ஆவணங்கள் பாஸ்கர ராமனின் கணினி தரவு சேமிப்பகத்தில் (ஹாா்ட் டிரைவ்) இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக பாஸ்கர ராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள காா்த்தி சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ, வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.

ஆனால், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பிரிட்டன் சென்றிருந்த காா்த்தி சிதம்பரம், சிபிஐ அழைப்பாணைக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதனை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், பிரிட்டனிலிருந்து நாடு திரும்பவும், திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆஜரானாா்.

‘அவரிடம் மாலை 6 மணி வரை அதிகாரிகள் தொடா் விசாரணை நடத்தினா். பிற்பகலில் ஒரு மணி நேர இடைவேளை அளித்தனா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த காா்த்தி சிதம்பரம், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தபோது ‘என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்தவொரு சீனருக்கும் விசா பெற்றுத் தர உதவவில்லை. இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள். சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும், ஆஜராக தயாராக உள்ளேன்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT