இந்தியா

சீனர்களுக்கு முறைகேடாக விசா: சீனர்களுக்கு முறைகேடாக விசா

DIN


புது தில்லி: விதிகளை மீறி சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்தது தொடர்பான புகாரில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கருப்புப் பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது: கடந்த 2011-இல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது என்றார் அவர்.
கார்த்தி சிதம்பரம் மீது கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் மூன்றாவது வழக்கு இதுவாகும். ஏற்கெனவே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுத் தந்தது, ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம் ஆகிய வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மீது கருப்புப் பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த 2011-இல் பஞ்சாபில் உள்ள தல்வண்டி சாபோ எரிசக்தித் திட்டத்தை நிறுவும் ஒப்பந்தம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தை முடிப்பதற்கான அவகாசம் கடந்ததால், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில் கூடுதல் பணியாளர்களை அழைத்து வந்து பணியை விரைந்து முடிக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இந்தியாவின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனத்தால் கூடுதலாகப் பணியாளர்களை அழைத்துவர முடியவில்லை.
அதையடுத்து, அந்த நிறுவனம் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகியது. விதிமுறைகளை மீறி 250 சீனப் பணியாளர்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக கார்த்தியிடம் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரம், அவரின் ஆடிட்டரும் தல்வண்டி நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டவருமான எஸ்.பாஸ்கர ராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பாஸ்கர ராமனின் கணினி தரவு சேமிப்பகத்தில் (ஹார்ட் டிரைவ்) இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாஸ்கர ராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT