இந்தியா

காங்கிரஸிலிருந்து கபில் சிபல் விலகல்

DIN


லக்னௌ/புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியில் இருந்து விலகினார். மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் உத்தர பிரதேசத்தில் இருந்து சமாஜவாதி கட்சி ஆதரவுடன் சுயேச்சையாக அவர் போட்டியிடுகிறார்.

உத்தர பிரதேசத்தில் 11 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஜூலை 4-ஆம் தேதி நிறைவடைகிறது. அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்த நிலையில், அவரின் எம்.பி. பதவிக் காலம் ஜூலை மாதம் நிறைவடைய உள்ளது. இதையொட்டி, அவர் மீண்டும் உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜவாதி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை அவர் உத்தர பிரதேச தலைநகர் லக்னௌவில் உள்ள மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸýடன் 30 ஆண்டு காலமாக நீடித்த உறவை முறித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. அக்கட்சியிலிருந்து நான் மே 16-ஆம் தேதி விலகினேன். எனினும் எனது சித்தாந்தம் காங்கிரஸýடன் தொடர்புடையது. அந்தக் கட்சியிடம் இருந்தும், அதன் சித்தாந்தத்திடம் இருந்தும் நான் வெகு தொலைவு வந்துவிடவில்லை.
கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளது. ஆனால், நாட்டில் சுதந்திரமான குரல் இருக்க வேண்டியது முக்கியம். தற்போது சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். 

பாஜகவை எதிர்ப்பதற்கான சூழல்: கூட்டணி ஒன்றை உருவாக்கி மோடி அரசை எதிர்க்க வேண்டும். பாஜகவை எதிர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்காக நான் தனிப்பட்ட முறையில் செயல்படுவேன். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் குறைபாடுகள் வெளிக்கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர். அவர், காங்கிரஸில் இருந்து விலகியுள்ளது அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT