இந்தியா

ஒடிசாவில் சாலை விபத்து: சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலி, 40 பேர் காயம்

25th May 2022 01:43 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். 

இந்த சாலை விபத்து கஞ்சத்தில் உள்ள துர்காபிரசாத் கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் நடந்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகள் 77 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, கந்தமால் மாவட்டத்தில் உள்ள டேரிங்கிபண்டியில் இருந்து ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நடந்ததாக கஞ்சம் காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ராய் தெரிவித்தார். 

ADVERTISEMENT

அருகில் உள்ள பஞ்சாங்கரை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 40 பேர் காயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். 

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மலைப்பாங்கான நிலப்பரப்பில் வளைவின்போது பேருந்து சாலையில் கவிழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஹவுரா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூரைச் சேர்ந்த சுபியா டென்ரே (33), சஞ்சீத் பத்ரா (33), ரிமா டென்ரே (22), அவரது தாயார் மௌசுமி டென்ரே மற்றும் பர்னாலி மன்னா (34) மற்றும் ஹூக்ளியின் கோபால்பூரைச் சேர்ந்த சமையல்காரர் ஸ்வபன் குஷெய்த் (44) ஆகியோர் உயிரிழந்தனர். 

பலத்த காயமடைந்தவர்கள் இங்குள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், பஞ்சநகர் துணைப் பிரிவு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றார். 

இதனிடையே, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஒடிசா போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாப பெஹராவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT