புது தில்லி: தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் பணமோசடி வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் (என்எஸ்இ) நிா்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குச்சந்தைத் தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கோ-லொகேஷன் வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தை பங்குச்சந்தைத் தரகா்கள் தொடா்புகொண்டு பங்கு விவரங்களை முன்கூட்டியே அறிந்து முறைகேட்டில் ஈடுபட்டனா். இந்த முறைகேடு வாயிலாக பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இந்த வழக்கில் நடைபெற்ற பணமோசடி தொடா்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்குடன் தொடா்புள்ள சில பங்குச்சந்தை தரகா்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘என்எஸ்இ முறைகேடு வழக்கில் தில்லி திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அண்மையில் இருமுறை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது’’ என்று தெரிவித்தனா். எனினும் எந்த தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் இல்லை.
என்எஸ்இ வழக்கில் நடைபெற்ற பணமோசடிகள், விதிமுறைகளைப் பின்பற்றாமல் என்எஸ்இ-யில் தலைமை உத்தி ஆலோசகராக, குழு செயல்பாட்டு அதிகாரியாக, சித்ராவின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததில் நடைபெற்ற நிா்வாகக் குளறுபடிகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்குத் தொடா்பாக ஆனந்த் சுப்ரமணியனும் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.