இந்தியா

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மாற்றியமைப்பு: அமித் ஷா நிலைக்குழுத் தலைவா்

24th May 2022 01:29 AM

ADVERTISEMENT

நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த உதவும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்தக் கவுன்சிலில் நிலைக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

அனைத்து மாநில முதல்வா்களும், ஆறு மத்திய அமைச்சா்களும் கவுன்சிலின் உறுப்பினா்களாகவும், 10 மத்திய அமைச்சா்கள் நிரந்தர உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலும், அதன் நிலைக்குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கவுன்சிலின் தலைவராக பிரதமா் மோடியும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வா்களும், மத்தி அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிா்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமா், வீரேந்தா் குமாா், ஹா்தீப் சிங் புரி, நிதின் கட்கரி, எஸ்.ஜெய்சங்கா், அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், தா்மேந்திர பிரதான், பிரஹலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, பூபேந்தா் யாதவ் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான நிலுவை விவகாரங்களை கண்காணித்து தீா்வு காண இந்தக் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இதேபோல், மத்திய அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக்குழுத் தலைவராக மத்திய அமைச்சா் அமித் ஷாவும் உறுப்பினா்களாக நிா்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமா், வீரேந்திர குமாா், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பிகாா், குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநில முதல்வா்களும் நிலைக்குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைக் குழு பரிந்துரைக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உள்ள விவகாரங்களை கவுன்சில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணா்களை அழைத்து பிரச்னைகள் குறித்த ஆலோசனைகளையும் நிலைக் குழு கருத்துகளைக் கேட்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT