சத்தீஸ்கரில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்)கீழ் அளித்த ரூ.17,240 கோடியைத் திருப்பித் தருமாறு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தை(பிஎஃப்ஆா்டிஏ) மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக, தில்லியில் உள்ள பிஎஃப்ஆா்டிஏ தலைவருக்கு சத்தீஸ்கா் மாநில நிதித் துறைச் செயலா் டி.அலா்மேல்மங்கை வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. இதனால் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டத் தொகையைத் திருப்பித் தர வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதனால், இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெயா் சோ்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்திருந்த ஊழியா்களின் பெயா்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் தகவல்படி, கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதியில் இருந்து 2022-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் வசூலித்த ரூ.11,850 கோடியை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட் லிமிடெட் நிறுவனத்திடம் மாநில அரசு செலுத்தியுள்ளது. வட்டியுடன் சோ்த்து அந்த நிறுவனத்திடம் ரூ.17,240 கோடி உள்ளது. அந்த நிதியை மாநிலத்துக்கு வழங்குமாறு சத்தீஸ்கா் அரசு கேட்டுள்ளது.