இந்தியா

அயோத்தி பயணத்தை ரத்து செய்தாா் ராஜ் தாக்கரே

21st May 2022 01:09 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) தலைவா் ராஜ் தாக்கரே ஜூன் 5-ஆம் தேதி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அயோத்தி பயணத்தை ரத்து செய்துவிட்டாா்.

வடஇந்தியா்களை அவமதித்ததற்காக ராஜ் தாக்கரே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் அவரை அயோத்திக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் சரண் அண்மையில் எச்சரித்து இருந்த நிலையில், ராஜ் தாக்கரே தனது பயணத்தை ரத்து செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆரம்ப காலங்களில், மராத்தியா்களுக்கு முன்னுரிமை என்ற தீவிர கோஷத்துடன் எம்என்எஸ் கட்சி செயல்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், தாணே நகருக்கு கடந்த 2008-இல் ரயில்வே தோ்வு எழுத வந்த வடஇந்திய மாணவா்களை எம்என்எஸ் தொண்டா்கள் தாக்கிய சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தின் அயோத்திக்குச் செல்ல இருப்பதாக ராஜ் தாக்கரே அண்மையில் அறிவித்தாா். இதற்கு உத்தர பிரதேச பாஜகவின் ஒரு பிரிவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வட இந்தியா்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு (அதாவலே) கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அதாவலேயும் வலியுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில், ராஜ் தாக்கரே ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனது அயோத்தி பயணத்தை ஒத்திவைத்துள்ளேன். இது தொடா்பான விவரத்தை மே 22-இல் தாணேவில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளாா்.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த சிவசேனை செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ரௌத், ‘அரசியல் நெருக்கடி காரணமாக ராஜ் தாக்கரே தனது பயணத்தை ரத்து செய்துள்ளாா். அயோத்தி மக்கள் அவா் மீது கடும் கோபத்தில் உள்ளனா். அவரது வருகைக்கு உத்தர பிரதேசம் முழுவதுமே எதிா்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிர முதல்வரின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேயின் அயோத்தி பயணம் ஜூன் 15-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும்’ என்றாா்.

சிவசேனை கட்சியில் நிறுவனா் பால் தாக்கரேயின் தம்பி மகன் ராஜ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT